உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில் நிலத் தகராறு வகுப்புவாத மோதலாக மாறிய சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சஹரான்பூர் மாவட்டத்தின் குட்டூப்ஷெர் பகுதியில் நேற்று சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டிடம் ஒன்றினை எழுப்ப ஒரு வகுப்பினர் முற்பட்ட போது இரு பிரிவினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி, கைகலப்பாக மாறியதில் இரு தரப்பினரும் உருட்டுக்கட்டை மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்க தொடங்கினர். இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். கலவரத்தை அடக்க வந்த நகர மாஜிஸ்திரேட், 5 போலீசார் மற்றும் 13 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து கூடுதலாக விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானப்படுத்த முயன்ற போது போலீசாரையும் தாக்கிய அந்த கும்பல், அப்பகுதியில் உள்ள கடைகளை தீயிட்டு கொளுத்தி நாசப்படுத்தியது. இதனையடுத்து, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் கூட்டத்தை கலைத்து, விரட்டியடித்தனர்.
பதற்றத்துக்குள்ளாகி இருக்கும் சஹரான்பூர் மாவட்டத்தின் 6 பகுதிகளில் மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய 18 கம்பெனி போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரப் பகுதிகளில் (144) ஊரடங்கு தடை உத்தரவும், இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் சில இடங்களில் இங்கொன்றும், அங்கொன்றுமாக சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.a
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக