பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர்.
மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்களில் சிவசேனா எம்.பி.க்கள் சிலர் மகாராஷ்ட்டிர மாநில பாரம்பரியப்படி தங்களுக்கு உணவு வழங்கவில்லை என்று ஊழியர்களிடம் கடந்த வாரம் தகராறு செய்தனர்.
அப்போது, அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரிடம் ‘இங்கு பரிமாறப்படும் சப்பாத்தியை தின்றுப் பார்’ என்று கூறினர். அதற்கு அவர், நான் இஸ்லாமியன். எனவே, ரம்ஜான் நோன்பு வைத்திருக்கிறேன். இப்போது நான் சாப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
சிவசேனா எம்.பி.க்கள் சிலர் அந்த ஊழியரின் வாயில் பலவந்தமாக சப்பாத்தியை திணித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வீடியோ காட்சிகளாக சில ஊடகங்களில் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து, இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.
இதனால், சிறிது நேரத்துக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது. கேள்வி நேரத்துக்கு பின்னர் இது பற்றி விவாதிக்கலாம் என்று சபாநாயகர் உறுதியளித்ததையடுத்து, அவர்கள் மற்ற அலுவல்களை கவனிக்க தொடங்கினர்.
ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமியரை வற்புறுத்தி சப்பாத்தியை சாப்பிட சிவசேனா எம்.பி.க்களின் செயலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு சிவசேனா எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டு விட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அத்வானி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக