சனி, ஜூலை 05, 2014

மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்கள் 4 பேர் கைது

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகளின் 30 ஆண்டு கால போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அரசு இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.


இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கலாங் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் 4 பேரை மலேசிய நாட்டின் தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசார் கைது செய்தனர்.
கைதான விடுதலைப்புலிகள் இலங்கையில் அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் மலேசியாவில் இருந்து கொண்டு தங்களது இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

மலேசியாவில் விடுதலைப்புலிகள் கைதானது பற்றி அந்நாட்டின் போலீஸ் ஐ.ஜி. காலித் அபு பக்கர்,   ‘’விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மலேசியாவை மையமாக  கொண்டு தங்களது இயக்கத்தை உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
மலேசிய போலீசார் இங்கிருந்து செயல்படும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்தபோது அவர்கள் சிக்கினர். அவர்கள் மலேசியாவை தங்களது பாதுகாப்பு மையமாக கொண்டு பல்வேறு தீவிரவாத தகவல்களை கடத்துதல், ஆயுதங்களை கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட முதல் விடுதலைப்புலிகளில் ஒருவர் இலங்கை அதிபர் சந்திரிகாவை கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி கொழும்பு டவுன்ஹாலில் நடந்த தேர்த பிரச்சார பேரணியில் கொலை செய்ய நடந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஆவார். 2-வது விடுதலைப்புலி வெடிகுண்டுகளை தயாரிப்பதில் மிகவும் திறமை மிக்கவர் ஆவார். 3-வது நபர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14-ந்தேதி கைதான நபரின் கூட்டாளி ஆவார்.

4-வது விடுதலைப்புலி வெளிநாடுகளில் இருந்து ரகசிய தகவல்களை திரட்டுவதிலும் போலி பாஸ்போர்ட்டு உள்ளிட்ட பல்வேறு போலி தஸ்தாவேஜுகளை உருவாக்குவதிலும் வல்லவர் ஆவார்.  இவர்களில் ஒருவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க ஐரோப்பிய நாடுகள் வழியாக நிதி திரட்ட திட்டமிட்டு ள்ளதும் தெரியவந்து உள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை தாக்க நடந்த திட்டத்தில் தொடர்புடைய விடுதலைப்புலி ஒருவரை கடந்த மே மாதம் 14-ந்தேதி கைது செய்தோம். இவர் வெளிநாட்டு மாணவருக்கான அனுமதி அட்டையும், வணிகம் செய்வதற்கான அடையாள அட்டையும் வைத்திருந்தார். அவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கான ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தோம்’’என்று கூறினார்.

மலேசியா போலீசார் மேலும்,  ‘‘மலேசியாவில் விடுதலைப்புலி இயக்கத்தை தொடங்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14-ந்தேதி 3 பேரை கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக