சனி, ஜூலை 12, 2014

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்!-என்.சி.எஸ்.ஓ கோரிக்கை

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய அமைப்புகளின் தேசிய கூட்டணி (என்.சி.எஸ்.ஓ.) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்பட அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் மற்றும் உளவாளிகளை கண்காணிப்பதற்கான வழிமுறைகளின்படி அந்நாட்டின் என்.எஸ்.ஏ., எஃப்.பி.ஐ. அமைப்புகள் கண்காணிப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது கவலை அளிக்கிறது.
தெற்காசிய மக்களுடன் இணைந்து பணியாற்றி வரும் அமைப்பு என்ற முறையில், இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களை குறிவைத்து பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் துரதிருஷ்டவசமானவை ஆகும்.
மசூதிகள், முஸ்லிம் மாணவர் அமைப்புகள், முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக உளவாளிகள் ஊடுருவல் உள்ளிட்டவை தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள், முஸ்லிம் சமூகத்தினரிடையே எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிடக்கூடும். ஆதலால், அப்பாவி முஸ்லிம்களை கண்காணிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்க நாடாளுமன்றமும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி: என்.எஸ்.ஏ. அமைப்பின் முன்னாள் ஊழியரான எட்வர்ட் ஸ்னோடன் வெளியிட்டுள்ள கோப்புகளை மேற்கோள்காட்டி, அமெரிக்காவின் பிரபல இணையதளத்தில், "தீவிரவாதிகள் மற்றும் உளவாளிகளை கண்காணிப்பதற்கு பின்பற்றப்படும் வழிமுறைகளின்படி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க வழக்குரைஞர் அஸிம் அப்துர் ரஹ்மான் கஃபூர் உள்பட அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களை அந்நாட்டு உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. அவர்களின் இ-மெயில்கள் இடைமறித்து படிக்கப்படுகின்றன. இதற்கான அனுமதியை உளவு அமைப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது' என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக