புதன், ஜூலை 23, 2014

விவசாய கடன் தள்ளுபடிக்கு நிபந்தனை: ரோஜா கண்டனம்

ஆந்திர மாநிலத்தில் தற்போது மீண்டும் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதியின் போது எந்த வித நிபந்தனையும் இல்லாமல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு, கடன் தள்ளுபடிக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தார்.

இதற்கு ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை ரோஜா கூறியதாவது:–
சந்திரபாபு நாயுடு விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். கடன் தள்ளுபடி செய்ய கோட்டைய்யா என்ற அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்து 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.கடன் தள்ளுபடிக்காக நிபந்தனை விதித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலை ஆகும். அனைத்து விவசாயிகளுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று 49 கூட்டங்களில் பேசியுள்ளார்.

ஆனால் தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தான் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆனால் அவர் ஒரு வங்கியை தவிர வேறு வங்கி எதிலும் கடன் வாங்கி இருக்க கூடாது. வருமானவரி கட்டுபவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாது. அரசு வேலையில் இருப்பவர்களுக்கும், பென்சன் வாங்குபவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது. விவசாயம் தவிர வேறு தொழில் செய்பவர்களுக்கும் கடன் தள்ளுபடி ஆகாது என பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதன்படி பார்த்தால் ஒரு மாவட்டத்துக்கு 10 விவசாயிகள் கூட பயன் பெற மாட்டார்கள். யார் கடனுமே தள்ளுபடி ஆகாது. இது விவசாய கடன் தள்ளுபடி என்ற போர்வையில் விவசாயிகளை ஏமாற்றும் வேலை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக