நாட்டின் தலைநகரான தில்லியில் குற்றங்களுக்குப் பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்கு குற்றவழக்குகள் அதிகரித்து வருகின்றன. நிகழாண்டின் ஜூன் வரையிலான 6 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 70 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது.
டெல்லியில் 2012ஆம் ஆண்டில் ஓடும் பஸ்ஸில் துணை மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும் புகார் தெரிவித்தன. தொடர்ந்து, குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்த தில்லி அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மிகவும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆகும். ஆனால், நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 70 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவே இந்த அளவுக்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தலைநகரில் பதிவான பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பான புள்ளி விவரத்தை போலீஸார் தயாரித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 80,184 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால், இவ்வாண்டு ஜூன் வரையில் ஐபிசி பிரிவில் மொத்தம் 71,523 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் 40 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 33 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
வீட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பாக கடந்த ஆண்டில் மொத்தம் 1,245 வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், இது நிகழாண்டின் 6 மாதங்களில் 2,678 வழக்குகளாக உயர்ந்துள்ளன.
பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பு: கடந்த ஆண்டு தில்லியில் 1,636 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 984 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “வேகமாக நடந்து வரும் நகர்மயமாதல், அதிகளவில் நகரங்களில் குடியேற்றம், சமூக, பொருளாதார சமத்துவமின்மை, குற்றச் சம்பங்களில் ஈடுபட்ட பிறகு அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்வதற்கான வழிகள் போன்றவையே தலைநகரில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம்’ என்றனர்.
தில்லி காவல் துறையின் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி அண்மையில், “பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவ வழக்குகள் நேர்மையான முறையில் பதிவாகி வருகின்றன. இதனால்தான் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 500 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக