கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியான கே.எல்.மஞ்சுநாத்தை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிப்பதற்கான தீர்மானத்தை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்ற மோடி அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நியமனக்குழு(கொலிஜியம்) நிராகரித்துவிட்டது.
இதன் மூலம் மஞ்சுநாத் தலைமை நீதிபதியாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கொலிஜியம் தனது முடிவில் உறுதியாக இருந்தால் மத்திய அரசு பணிந்தாகவேண்டும்.நீதிபதி நியமனம் தொடர்பாக மோடி அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு இதன்மூலம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.மஞ்சுநாத்தை தலைமை நீதிபதியாக்குவதற்கான பரிந்துரையை நேற்று முன் தினம் மோடி அரசு திருப்பி அனுப்பியிருந்தது.
இரண்டாவது முறையாக கொலிஜியத்தின் சிபாரிசை மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சொரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் நியாயமாக செயல்பட்ட வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரையை மோடி அரசு திருப்பி அனுப்பியிருந்தது. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அரசு நடவடிக்கை சரியல்ல என்றும் இதுபோல எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் லோதா எச்சரிக்கை விடுத்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக