செவ்வாய், ஜூலை 22, 2014

மோடிக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க சீக்கியர்கள் கையெழுத்து வேட்டை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ரத்து செய்யுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வலியுறுத்தி அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் 'ஆன் லைன்' மூலம் கையெழுத்து வேட்டை பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இரு நாட்டு தலைவர்களும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோடியின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அழைப்பை ஒபாமா ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அமெரிக்காவில் உள்ள சீக்கியர் உரிமை மற்றும் நீதி என்ற அமைப்பு 'ஆன் லைன்' மூலம் கையெழுத்து வேட்டை பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விட்ட பா.ஜ.க.வை சேர்ந்த தற்போதையை பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு அழைத்து விருந்து அளிப்பதை விட, மோடியையும் அவரது கட்சியையும் அதிபர் ஒபாமா கண்டிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

1984-ம் ஆண்டு பஞ்சாப் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களின் இறப்புக்கும், 2008-ம் ஆண்டில் ஒடிசாவில் கிருஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைக்கும் பா.ஜ.க. தான் தூண்டுகோலாக இருந்தது எனவும் இந்த சீக்கியர் அமைப்பின் 'ஆன்லைன்' பிரசாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்களின் கோரிக்கையை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பரிசீலிக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் இந்த பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட வேண்டும். வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதிக்குள் இந்த இலக்கினை எட்டி வெள்ளை மாளிகையின் கவனத்தை ஈர்க்க அமெரிக்காவில் வாழும் சீக்கியர் உரிமை மற்றும் நீதி அமைப்பு மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக