இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது-
பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது நம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி விடும். அமெரிக்கா உலக நாடுகளை வேவு பார்க்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி வீட்டில் இருந்து உளவு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்னிய நேரடி முதலீட்டை பாதுகாப்பு துறையில் அனுமதிப்பது எவ்வளவு மோசமானது என்பது தெரியவரும். ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்யும் மரண வியாபாரிகளை உள்ளே நுழைய மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே இதை கைவிட வேண்டும். உற்பத்தி துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொடங்கி வேலைவாய்ப்பை அளிப்பதால் உற்பத்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சம்பவத்தில் இரண்டு நாடுகளும் நட்பு நாடுகள் என்று கூறி இந்தியா நடுநிலைமை வகிப்பது இஸ்ரேலை ஆதரிக்கும் செயலாகும். இதுவும் நமது நாட்டு வெளிநாட்டு கொள்கைக்கு எதிரானது.
பருவமழை தவறி உள்ள இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை அளிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 400 நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் கோடி வரி சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தால் ரூ.42 ஆயிரம் கோடி தான் செலவாகும். எனவே தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது.
கச்சத்தீவு, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமாகி விடும். ஆனால் கச்சத்தீவு எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இலங்கை போர் குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தியா வரும் ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இலங்கை ராணுவத்தினருக்கு கடந்த மாதம் வரை குன்னூரில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ராணுவ கருத்தரங்குக்கு இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ள செல்வது என இலங்கையின் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே மத்திய பாரதீய ஜனதா அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக