திங்கள், ஜூலை 14, 2014

வங்காளதேசத்தில் எதிர்ப்பு காரணமாக 200 ஆண்டு பழமையான விபச்சார விடுதி மூடல்

வங்காள தேசத்தில் சமீப காலத்தில் தீவிர இஸ்லாமியத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உள்ளூர் மத குருமார்களும், இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் அங்கு பழைமை வாத விதிகளைத் தீவிரமாக செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். இங்கு பொதுவாக பாலியல் தொழில் தடைப்படுத்தப்பட்ட ஒன்று என்றபோதிலும் அரசு வரலாற்று ரீதியாக இங்கு செயல்பட்டுவரும் இத்தொழிலை சகித்துக்கொண்டுதான் வருகின்றது.

ஆனால், பழமைவாத எழுச்சி கொண்ட இஸ்லாமியர்களும், பிற ஆர்வலர்களும் கடந்த சில வருடங்களில் அந்நாட்டில் உள்ள பனிரெண்டுக்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகளை மூடியுள்ளனர். இவற்றுள் தலைநகர் டாக்காவிற்கு வெளியே செயல்பட்டுவந்த பெரிய விடுதியான தன்பசாரும் அடங்கும். நேற்று மீண்டும் தங்கைல் நகரில் இருந்த 200 ஆண்டு கால பழைமை வாய்ந்த கண்டபரா விபச்சார இல்லங்களும் காலி செய்யப்பட்டன.

அங்கு வாழ்ந்துவந்த 750-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த குடியிருப்புகளின் உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அனைவருக்கும் நேற்று நோட்டீஸ் அளித்ததாகவும், எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அவர்கள் அனைவரும் வெளியேறினார்கள் என்றும் மாவட்ட காவல்துறைத் தலைவர் சலே முகமது தன்வீர் தெரிவித்தார்.

கடந்த வாரம் இஸ்லாமிய மதகுருமார்களும், தன்னார்வலர்களும் இவர்களைக் காலி செய்யக் கோரி அங்கு நடத்திய ஒரு ஊர்வலத்தைத் தொடர்ந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்தததாகக் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக