ஞாயிறு, ஜூலை 27, 2014

லிபியாவில் எழுச்சி பெற்ற போராளிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசுப் படைகள்

லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளை கட்டுப்படுத்த முடியாமல் அரசுப் படைகள் திணறி வருகின்றன.
லிபியாவில் தலைநகர் திரிபோலியில் உள்ள  விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக போராளிகள் குழுவினரிடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. 

மேற்கு நகரமான ஜின்டானில் உள்ள சக்திவாய்ந்த போராளி குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையத்தை கிழக்கு திரிபோலி மிஸ்ரடா போராளிகள் ஏவுகணைகளை வீசி தாக்கினர். துப்பாக்கி சூடும் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரு விமானம் குண்டு வீசி தகர்க்கப்பட்டதால் இந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

இரு தரப்பிலும் சுமார் நூறு பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், லிபியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதையொட்டி தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்தை இழுத்து மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழலைக் கருதி திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதாகவும், அண்டை நாடான துனிசியா அல்லது தென்னாப்பிரிக்காவின் ஏதாவது ஒரு நாட்டில் இருந்தபடி லிபியாவுக்கான தூதரக உறவுகள் தொடர்பான பணிகளை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிபோலி உயர் தூதரகத்தில் பணியாற்றி வந்த அத்தனை பேரும் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்களின் பாதுகாப்புடன் மூலம் துனிசியா நாட்டுக்கு சென்றுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிபோலியில் நிலைமை சீரடையும் வரை அமெரிக்கர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் லிபியாவில் வசித்து வரும் அமெரிக்கர்கள் உடனடியாக தாய்நாட்டுக்கு திரும்பி வரும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக