அஸ்ஸாமில் பக்ஸா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணி(என்.டி.எஃப்.பி-சோம்ஜித்) தீவிரவாதிகள் கடத்திச் சென்ற 4 முஸ்லிம்களை கொலைச் செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 2 சிறுவர்களும் அடங்குவர்.
அதாவூர் ரஹ்மான்(வயது 27), ருபுல் அமீன்(வயது 45), ஸதாம் அலி(வயது 13), பக்கர் அலி(வயது 13) ஆகியோரின் உடல்கள் பெக்கி நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே இந்த படுகொலைகளுக்கு எதிராக ஸல்பாரி சப்-டிவிசனில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீஸ் வானை நோக்கிச்சுட்டது. இப்பகுதியில் கலவர சூழல் நீடிக்கிறது. கடத்தப்பட்டவர்களில் 3 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஒருவருடைய உடல் சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டது. படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக பக்சா போலீஸ் துணைக் கமிஷனர் வினோத் ஷேசன் தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை பார்பேட்டா மாவட்டத்தில் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுவன் பக்கர் அலியின் தலையில் காயத்தின் அடையாளமிருந்தது. கொல்லப்பட்டவர்கள் பார்பேட்டா மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் ஆவர்.உடல்களை அடக்கம் செய்ய கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும், ஊர்மக்களும் மறுத்தனர்.தங்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முதல்வர் தருண் கோகோய் அப்பகுதிக்கு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனந்த் பஸார் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் வானை நோக்கி சுட்டதாக துணை கமிஷனர் ஷேசன் தெரிவித்தார்.
நான்கு முஸ்லிம்கள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பக்ஸா மாவட்டத்தில் சல்பாரி சப்-டிவிசன் மற்றும் ஆனந்த் பஸார் பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட பெருமளவில் போலீஸாரும், சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் தயாராக உள்ளது.பார்பேட்டா மாவட்டத்தின் அருகில் உள்ள பக்ஸா மாவட்டத்தில் லபான்குடி மார்க்கெட்டில் நாரங்காய் விற்கச் சென்ற ஏழுபேரில் நான்குபேரைத்தாம் போடோ தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலைச் செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பக்ஸா போலீஸ் சூப்பிரண்ட் நில்பால்கர் வைபவ் சந்திரகாந்த் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 10-வது அஸ்ஸாம் போலீஸ் பட்டாலியன் கமாண்டர் முஜீபுர்ரஹ்மான் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் பக்ஸா, கொக்ராஜர் மாவட்டங்களில் போடோ தீவிரவாதிகள் பல முஸ்லிம்களை கொலைச் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக