காசா நகரத்தில் மருத்துவமனை ஒன்றில் இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடிய ஷெல் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டும், குறைந்தது ஏழு பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவப் பணியாளர்கள்.
நகரின் கிழக்கேயுள்ள அல் அக்ஸா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், வரவேற்பறை போன்ற இடங்களில் ஷெல் குண்டுகள் விழுந்ததாக சம்பவத்தைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.
காஸ்ஸாவில் பொது மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடிய தொடர் தாக்குதல்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருபது பேர் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸ்ஸாவில் இருந்து சுரங்கங்கள் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற ஆயுததாரிகள் குறைந்தது பத்து பேரை கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
இதனிடையே காசாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்தி, சமரச முயற்சிகளை மேலும் முன்னெடுக்கும் வகையிலான ராஜீய நடவடிக்கைகள் எகிப்தில் ஆரம்பித்துள்ளன. ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் கெய்ரோ சென்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியும் அங்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அங்கு உடனடியாக மோதல் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கோரியுள்ளது. காஸ்ஸாவில் இதுவரை கொல்லப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை 500ஐக் கடந்துள்ளது என்று காஸ்ஸாப் பகுதியின் சுகாதாரத்துறை கூறுகிறது. இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதில், அமெரிக்கா, எகிப்து , கத்தர், பிரான்சு ஆகிய நாடுகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.ஆனால், இஸ்ரேல் கொடிய தாக்குதலை தொடரத்தான் செய்கிறது. ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம், காஸ்ஸா தொடர்பாக ஒரு அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எகிப்து கோரியுள்ளது. அப்படியான ஒரு கூட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக