வியாழன், ஜூலை 31, 2014

காமன்வெல்த்தில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு

அரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா நேற்று சண்டிகாரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் அரியானாவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்து அளிப்பது என்று மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சமும் ஊக்கத்தொகையாக கிடைக்கும். முன்பு தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.10 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாகவும், வெண்கலம் பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும் ஊக்கத்தொகை உயர்த்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இதுவரை 3 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். அவர்கள் நாடு திரும்பியதும் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்படுவார்கள். தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.

இவ்வாறு பூபிந்தர்சிங் ஹூடா தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக