ஞாயிறு, ஜூலை 06, 2014

சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு குறித்து காங்கிரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அதன் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் போக்குதான் காரணம் என்ற காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணியின் கூற்றிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரத்தையும் அந்தோணி சமர்பிக்காததால் இது அடிப்படையற்ற பொறுப்பற்ற அறிக்கை என்று கே.எம்.ஷரீஃப் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை சமூகத்தின் நன்மதிப்பை பெறும் நோக்கில் வகுப்புவாத அஸ்திரத்தை பயன்படுத்துவது குறித்து காங்கிரஸ் தலைமையை அவர் எச்சரித்தார்.
வலதுசாரி குழுக்களை திருப்திபடுத்துவதற்காக இது போன்ற அறிக்கைகளை கடந்த காலங்களிலும் ஏ.கே.அந்தோணி விடுத்துள்ளார். சில காங்கிரஸ் தலைவர்கள் இந்த கருத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ள போதும், அந்தோணியை கண்டித்தோ அல்லது அறிக்கையை திரும்ப பெற வற்புறுத்தியோ காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் படிக்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகளை அவர்கள் ஆராயவில்லை என்பதையும்தான் இது காட்டுகிறது.
பா.ஜ.க.விற்கு சாதகமான தீர்ப்பு என்பதைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீதான மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் தேர்தல் முடிவுகள் என்றே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரசுக்கு வாக்களித்த சிறுபான்மையினர் கூட இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சிறுபான்மை விரோத கொள்கைகளால் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அறிவிக்கப்பட்ட சிறுபான்மை நல திட்டங்களை கூட காங்கிரஸ் அரசாங்கம் நடைமுறைபடுத்த தவறி விட்டது. சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு முந்தைய அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. தற்போது அதன் கிங் மேக்கர்களில் ஒருவர் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வாதம் என்ற முட்டாள்தனமாக ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். சிறுபான்மையினர் அந்தளவிற்கு முட்டாள்கள் அல்ல என்பதை கே.எம்.ஷரீஃப் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு நினைவூட்டினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்பதையும் அதில் அந்தோணியின் கீழிருந்த பாதுகாப்பு துறையும் விதிவிலக்கல்ல என்பதையும் அறிவுள்ள எந்த இந்தியனும் சந்தேகப்படமாட்டான். உண்மை இவ்வாறிருக்க இந்துத்துவ வகுப்புவாதத்தின் புதிய தாளங்களுக்கு ஏற்ப அந்தோணி ஆட ஆரம்பித்துள்ளார் அல்லது மாறிவிட்ட அரசியல் சூழலில் தனது சுய செயல்திட்டத்தை அவர் நிறைவேற்ற முயற்சி செய்கிறார். இந்திய தேசமும் காங்கிரஸ் கட்சியும் கட்டமைக்கப்பட்டுள்ள சோசியலிச மதச்சார்பற்ற கொள்கைளில் இருந்து மாறிவிட வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்களை கே.எம்.ஷரீஃப் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக