பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல் தலைமையிலான அகாலிதளம் கூட்டணி மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர் ஜாகிர்கவூர். சீக்கிய மத அமைப்பான சிரோமணி குருந்தவாரா பிரபந்த கமிட்டி தலைவராகவும் இருந்தார். பஞ்சாப் பெண் மந்திரியான ஜாகிர்கவூர் மீது சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் ஹர்பிரித்கவூர் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்தார். கர்ப்பம் அடைந்த தனது மகளை இவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தார். இதில் ஹர்பிரித் இறந்தார்.
கருக்கலைப்பு மற்றும் கொலை வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் மந்திரி ஜாகிர் கவூருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்-மந்திரி பாதல் அவரை மந்திரி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். ஜாகிர்கவூர் முதலில் பாட்டியாலா ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்று கபூர்தலா ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
ஜெயிலில் ஜாகிர்கவூர் மிகவும் விசேஷமாக கவனிக்கப்படுகிறார். முக்கிய பிரமுகர்கள்போல் அவரை ஜெயில் அதிகாரிகள் நடத்துகிறார்கள். ஜாகிர் கவூருக்கு உள்ள அரசியல் செல்வாக்கு காரணமாகவே அவருக்கு சிறையில் ராஜ உபசரிப்பு நடைபெறுகிறது.
ஜெயிலில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கிரிமினல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு சிறையில் விசேஷ வசதி செய்யப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அவர் பாட்டியாலா சிறையில் இருந்து கபூர்தலா ஜெயிலுக்கு குளுகுளு வசதி செய்யப்பட்ட நவீன காரில் கொண்டு செல்லப்பட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது வருகைக்காக ஜெயில் வாசலில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஜெயில் அதிகாரிகள் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜாகிர்கவூர் காங்கிரஸ் வேட்பாளர் சுக்பால் சிங்கை தோற்கடித்தார். அவருக்கு கிராமப்புற குடிநீர் வழங்கல் துறை மந்திரி பதவி கிடைத்தது. 5 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றதால் மந்திரி பதவியை இழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக