திங்கள், ஏப்ரல் 02, 2012

ஆங் சான் சூசிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!


ரங்கூன்:மியான்மர் இடைத்தேர்தலில் நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயக போராளியுமான ஆங் சான் சூசி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியுள்ளார். 45 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் கவாமு தொகுதியில்  போட்டியிட்ட 66 வயதான சூசி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார். ஆனால், சூசியின் வெற்றி தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

சூசியின் கட்சியான நேசனல் லீக் ஃபார் டெமோக்ரெஸி சூசி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம். கவாமு தொகுதியில் 99 சதவீத வாக்குகளையும் சூசி பெற்றுள்ளதாக அவரது கட்சி கூறுகிறது. இடைத்தேர்தலில் சூசியின் கட்சியான நேசனல் லீக் ஃபார் டெமோக்ரெஸி போட்டியிட்ட பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் கூறுகின்றன.
20 ஆண்டுகளுக்கும் அதிகமான நீண்ட ஜனநாயக போராட்டத்திற்கு பிறகு சூசி முதன் முறையாக அரசை உருவாக்குவதில் பங்கேற்க இருக்கிறார். சூசியின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் அது மியான்மரின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறும். மியான்மருக்கு எதிரான சர்வதேச தடைகள் நீக்கப்படவும் காரணமாகும்.
25 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியின் கீழ் ஆளப்படும் மியான்மரில் ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்தியதற்காக 20 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் சூசி வைக்கப்பட்டார். கடந்த 2010 நவம்பர் மாதம் சூசி விடுதலைச் செய்யப்பட்டார். சூசி வெற்றிப்பெற்ற செய்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் அவரது கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.
நாட்டின் பிரபல வர்த்தக தலைநகரான ரங்கூனில் கட்சி தலைமை அலுவலகம் முன்னால் திரண்ட கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர். தெருக்களில் கட்சி தொண்டர்கள் சிவப்பு கட்சிக் கொடியை வீசியவாறு நடனமாடினர்.
‘நாங்கள் இத்தகையதொரு தினத்திற்காக காத்திருந்தோம்’ என்று சூசியின் ஆதரவாளர்கள் கூறினார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மியான்மரில் இடைத்தேர்தல் துவங்கியது. 6.4 லட்சம் பேர் தங்களது வாக்குகளை பதிவுச் செய்தனர். 17 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட 157 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர்.
தேர்தலில் முறைகேடுகள் குறித்து குற்றச்சாட்டுக்கள் வலுவாக எழுந்தன. முதன் முதலாக தேர்தலில் போட்டியிடும் நேசனல் லீக் ஃபார் டெமோக்ரெஸி தேர்தல் கமிஷனுக்கு 50க்கும் அதிகமான புகார்களை அளித்தது. வாக்கை பதிவுச்செய்ய முடியாத அளவுக்கு வாக்குச்சீட்டில் மெழுகு புரட்டியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முக்கியமானது, சில வாக்குச் சீட்டுகளில் தேர்தல் கமிஷனின் சீல் இல்லை. இதனால் வாக்குச்சீட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
சூசி மற்றும் அவரது கட்சியின் வெற்றி 664 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற அதிகார சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. மக்கள் பிரநிதிகளில் பெரும்பாலோர் சாதாரண மக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்களின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். ஆனாலும், சூசி பாராளுமன்றத்திற்கு வருகை தருவதால் எதிர்கட்சி பலம் பெறும் வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு ராணுவம் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. ஆனால், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள்தாம் அப்பொழுதும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தேர்தல் நீதியாகவோ, சுதந்திரமாகவோ நடைபெறவில்லை. ஆனால், ஜனநாயக பாதையை நோக்கி மியான்மர் காலடியை எடுத்துவைக்கும் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து தடைகளை வாபஸ் பெறுவதை குறித்து ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் சூசகமாக தெரிவித்தன.
மியான்மரில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சர்வதேச சமூகம் அந்நாட்டின் மீது தடைகளை ஏற்படுத்தியது. ஸ்திரமான அரசு மியான்மரில் உருவானால் இந்தியா, சீனாவைப் போல வலுவான நாடாக மாறும் அளவுக்கு அந்நாட்டில் தாது வளம் அதிகமாக உள்ளது.
சூசியின் வெற்றியை சர்வதேச ஊடகங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. ஏராளமான முறைகேடுகள் நடந்த பிறகும் சூசி வெற்றி பெற்றதன் மூலம் அவருக்கான வலுவான செல்வாக்கு நிரூபணமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக