டெல்லி: நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
காங், பாஜக நிலைமை
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலு இல்லாமல் இருப்பதால் வேட்பாளர்களை முடிவு செய்வதுகூட எளிதான காரியமாக இருக்காது.
அதைவிட முக்கியம் சமாஜவாதி, அ.இ.அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மாநிலக் கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
அதைவிட முக்கியம் சமாஜவாதி, அ.இ.அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மாநிலக் கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
தங்களுக்குள்ள வாக்கு வலிமையை மிக நுட்பமாகப் பயன்படுத்தக் கூடும் என்பதால் கடுமையான பேரம் இல்லாமல் காய் நகராது என்பது நிச்சயமாகிவிட்டது.
காங்கிரஸூம் பாரதிய ஜனதாவும் தாங்கள் பெரிய கட்சி என்ற இறுமாப்பைத் தொலைத்து, சற்றே இறங்கிவந்தால்தான் தங்களுடைய வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்ற நிலையில் இருக்கின்றன.
மாநிலக் கட்சிகள்
மாநிலக் கட்சிகள் தாங்களாகவே ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்து நிறுத்தி வெற்றிபெறச்செய்ய முடியாது என்றாலும் தங்களுக்குப் பிடிக்காத வேட்பாளரைப் பெரிய கட்சிகள் நிறுத்திவிடாமல் தடுக்க முடியும்.
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவிடம் காங்கிரஸ், காங்கிரஸிடம் பாரதிய ஜனதாவோ மனம்விட்டுப் பேசி பொது வேட்பாளரைத் தெரிவு செய்தால் வெற்றி சுலபமாகலாம்.
சமரச முயற்சி?
குடியரசுத் தலைவர் வேட்பாளரைக் காங்கிரஸ் தேர்வு செய்துவிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரை பாரதிய ஜனதா தேர்வு செய்ய வாய்ப்பு தந்து பிரச்னையை முடித்துவிட்டுப் போகலாம் என்போர் சிலர்.
பாரதிய ஜனதாவிடம் எந்தத் தேர்வைக் கொடுத்தாலும் அது காங்கிரஸூக்கு பெரிய பிரச்னையாகத்தான் இருக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் அச்சம்.
இவ்விரு பதவிகளில் குடியரசுத் தலைவர் பதவிதான் பெரிது என்பதால் அந்தப் பதவிக்குக் காங்கிரஸ்காரர் தேர்வு செய்யப்படுவது முக்கியம்தான். அது கெளரவம் மிக்க பதவியும்கூட. ஆனால் குடியரசு துணைத் தலைவர் பதவியும் சாதாரணமானதல்ல. அந்தப் பதவிக்கு வருகிறவர்தான் மாநிலங்களவையின் தலைவராகப் பொறுப்பு வகிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரை அல்லது அவர்களுடைய
ஆதரவாளரை மாநிலங்களவைத் தலைவராக்குவது என்பது பூனைக்குட்டியை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாகிவிடும்.
மாநிலங்களவையில் காங்கிரஸூக்கு பெரும்பான்மை வலு இல்லை. மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி இருக்கிறது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவராக பாரதிய ஜனதாக்காரர் வந்தால் காங்கிரஸ் அரசுக்கு வேறு வினையே வேண்டாம். எனவேதான் காங்கிரஸால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தயங்க நேர்கிறது.
இப்போதுள்ள நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு 31% வாக்குகளும் பாரதிய ஜனதாவுக்கு 24% வாக்குகளும் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10,98,882. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள்ள வாக்கு பலம் 40%, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ள வாக்கு பலம் 30%.
திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, அஇஅதிமுக, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் ஆகிய மாநிலக் கட்சிகளிடம் கணிசமான வாக்கு வலிமை இருக்கிறது. இவை ஏதாவதொரு தேசியக் கட்சியை ஆதரிப்பதற்கு ""உரிய விலை''யை எதிர்பார்க்கும்.
மன்மோகன்? பிரணாப்? பாதல்?
அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளராக மன்மோகன் சிங் நிறுத்தப்படலாம் என்று முதலில் பேசப்பட்டது. சீக்கியரான அவரை நிறுத்தினால் பாஜகவின் கூட்டாளியான சிரோமணி அகாலிதளமும் அவரை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் வட்டாரங்களில் நிலவுகிறது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ
அதன் அரசுகளுக்கோ ஆபத்து ஏற்படும்போதெல்லாம் அவரிடம்தான் ஆலோசனை கேட்க ஓடுவது வழக்கம். அவரை குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அனுப்பிவிட்டால் அவரிடம் நெருங்கவே முடியாதே என்ற கவலை பல காங்கிரஸாருக்கு.
இதுவரை பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி அணுகி குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்கவில்லை. எனவே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான அருண் ஜேட்லியிடம் இது குறித்துக் கேட்டபோது, வேட்பாளர் யார் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பிறகு வந்து ஆதரவு கேட்கட்டும் என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் வேட்பாளரை ஆதரிக்கிறோம், பதிலுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் வேட்பாளரை ஆதரியுங்கள் என்று காங்கிரஸிடம் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் வேடிக்கையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
கருத்தொற்றுமை அடிப்படையில்தான் வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து நாங்கள் இன்னும் சிந்திக்கவே தொடங்கவில்லை என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் மோகன் சிங்கும் பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் பகதூர் சிங்கும் கூறுகின்றனர்.
திரிணமூல் கட்சி என்ன முடிவெடுக்குமோ என்று காங்கிரஸôல் ஊகிக்கக்கூட முடியவில்லை. காங்கிரஸ் தன்னுடைய ஆணவத்தை விட்டுக்கொடுத்துவிட்டு எதிர்க்கட்சிகளுடன் பேசினால் தீர்வு நிச்சயம் என்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சிவானந்த திவாரி.
இடதுசாரிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகள் அல்லது கூட்டணிகளின் வேட்பாளர்கள்தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதால் தன் பங்கு இதில் மிகவும் குறைவு என்பதால் அடக்கமாக இருக்கிறது.
ஜெ. பங்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சிரோமணி அகாலிதளக் கட்சியின் பிரகாஷ் சிங் பாதல் நிறுத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஒரு வட்டாரம். ஜெயலலிதா கட்சிக்குள்ள வாக்குகள் அடிப்படையில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு கூடி வருகிறது. எனவே ஜெயலலிதாவைத் தங்கள் அணிக்கு ஆதரவாகச் செயல்பட கேட்டுக் கொள்வதற்காக இந்த வார இறுதியில் சென்னை வருகிறார் அருண் ஜேட்லி என்றுகூட தில்லி வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.
இந்த முறை கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் கடைசிவரை முடிவு என்ன என்ற பரபரப்பு நிச்சயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக