சென்னை: தமிழகத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ஒரே நாளில் ரூ.223 உயர்ந்துள்ளது. இதனால் டீ, காபி விலையை ஹோட்டல்கள் தாறுமாறாக உயர்த்தும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கு 15 கிலோ கேஸ் சிலிண்டரும், ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உபயோகத்திற்கு 19 கிலோ சிலிண்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 15 கிலோ சிலிண்டர் ரூ.395க்கும், 19 கிலோ சிலிண்டர்கள் ரூ.1,667.50க்கும் விற்பனையானது.
எரிபொருட்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதில இருந்து மாதம் ஒரு முறை வர்த்தக நிறுவனங்களுக்கான சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக மாதம் ரூ.100 அதிகரித்து வந்த நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை நேற்று ஒரேயடியாக ரூ.223 உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,890க உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இருப்பதாக டீக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 1 ஆண்டில் மட்டும் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,000 உயர்ந்துள்ளது.
பால் விலை, மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளதால் சில்லறை வர்த்தகம், சிறு கடை உரிமையாளர்கள் வியாபாரத்தை தொடர இயலாத நிலை ஏற்படும் என்று சிறு கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது தவிர தனியார் நிறுவனங்களின் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.150 அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி ரூ.1,475க்கு விற்கப்பட்ட 17.5 கிலோ தனியார் கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,625க்கு விற்கப்படுகிறது.
வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆவின் பால் விலையும், தனியார் பால் விலையும் உயர்ந்தது. இதையடுத்து டீ, காபி விலை உயர்ந்தது. தமிழகத்தில் உள்ள பெரிய டீ, காபி கடைகளில் ஒரு டீ ரூ.6க்கும், பார்சல் டீ ரூ.15க்கும், காபி ரூ.10க்கும், பார்சல் காபி ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதையடுத்து டீ, காபி விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லா டென்ஷனையும் குறைக்க ஏதாவது டீக்கடையைத்தான் சாதாரண ஜனங்கள் நாடுகிறார்கள். தற்போது அங்கும் விலை உயரப் போவதால் மக்கள் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக