திங்கள், ஏப்ரல் 02, 2012

மீண்டும் உண்ணாவிரதம்:ராம்தேவின் அடுத்த நாடகம் துவங்குகிறது!


புதுடெல்லி:கடந்த ஆண்டு ஜுன் மாதம் 3-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹைடெக் உண்ணாவிரதம் போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கையை தொடர்ந்து காணாமல் போன ராம்தேவ் மீண்டும் இந்த ஆண்டும் ஜூன் மாதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:

“உலகம் முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வரும் வரை எங்களின் போராட்டம் தொடரும். நாடு தழுவிய அளவில் இதற்கென ஓர் இயக்கத்தை உருவாக்கியுள்ளோம்.
டெல்லியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்தினோம். அதை சீர் குலைக்கும் வகையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். அதன் நினைவாகவும் மீண்டும் அரசுக்கு எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு மாதங்களுக்கு ‘கறுப்புப் பண மீட்பு கோரல்’ பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.
இதன் முடிவில், ஜூன் 3-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் போராட்டம் நடத்தப்படும். அறவழியில் நானும் ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தபடி போராட்டம் நடத்துவோம். எங்கள் போராட்டத்தை அன்னா ஹசாரே குழு ஆதரிக்கும்” என்று பாபா ராம்தேவ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக