செவ்வாய், ஏப்ரல் 03, 2012

ஹனா ஷலபி காஸ்ஸாவுக்கு நாடு கடத்தப்பட்டார்!


ஜெருசலம்:அநீதமான கைதினை எதிர்த்து இஸ்ரேல் சிறையில் 43 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஃபலஸ்தீன் பெண்மணி ஹனா ஷலபி காஸ்ஸாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இஸ்ரேலுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஒப்பந்தத்தை தொடர்ந்து ஷலபி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தியிருந்தார்.

இரஸ் எல்லை வழியாக ஷலபி காஸ்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஃபலஸ்தீன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட ஷலபி ஆம்புலன்ஸ் மூலம் காஸ்ஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காஸ்ஸாவில் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஸ்ஸாவில் நுழைவதற்கு முன்பு இரஸ் எல்லையில் வைத்து அவர் தனது குடும்பத்தினருடன் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பை நிகழ்த்தினார். வாழ்க்கையின் மிகவும் சிரமமான நிமிடங்களாக தனது உறவினர்களுடன் சந்திப்பை நிகழ்த்திய தருணம் அமைந்தது என்று ஷலபி கூறினார்.
இஸ்லாமி ஜிஹாத், ஹமாஸ் ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஷலபியை காஸ்ஸாவிற்குள் வரவேற்றனர்.
ஆட்சி நிர்வாக ரீதியிலான கைதின் பெயரால் ஆறுமாதம் வரை குற்றம் எதுவும் சுமத்தாமல் சிறையில் அடைக்கும் சட்டத்தின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி ஷலபி கைது செய்யப்பட்டார். இஸ்ரேலின் இத்தகைய அநீதிக்கு எதிராக கைதான நாள் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிய ஷலபி கடந்த மார்ச் 29-ஆம் தேதி விடுதலைச் செய்வோம் என்று இஸ்ரேல் அளித்த உறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இதுக்குறித்து ஷலபி கூறியது: 3 ஆண்டுகள் காஸ்ஸாவில் தங்கவேண்டும் என்று இஸ்ரேலின் நிபந்தனையை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். காஸ்ஸாவும் எனது நாடுதான். மூன்று வருடம் இங்கு தங்கியபிறகு நான் பிறந்த இடமான ஜனீனுக்கு செல்வேன். அதுவரை காஸ்ஸாவில் இருந்துகொண்டு சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராட்டத்தை தொடர்வேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக