புதுடெல்லி:மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட பொதுநலன் வழக்கின் மீதான விசாரணையில் பதில் அளித்துள்ள மத்திய அரசு, விரைவில் இதுத்தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளது. 2003-ல் துப்புரவுத் தொழிலாளிகளுக்கான சஃபாய் கர்மாசாரி அந்தோலன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் கொடுமையை
எதிர்த்து பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு 9 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்யும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு எனக்கு எழுத்து மூலமாக தகவல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மசோதா தாக்கல் செய்யப்படும் வரை நீதிமன்றம் பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.
அப்பொழுது சஃபாய் கர்மாசாரி அந்தோலன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் பல தடவை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவுகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் சரிவரப் பின்பற்றவில்லை. உச்ச நீதிமன்றம் 2009-ல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுக்குக்கூட உத்தரகண்ட் அரசு முறையாகப் பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சுமத்தினர்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக முறையாகப் பதில் அளிக்கத் தவறியது குறித்து நீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக