மனைவி கண்ணெதிரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கன்னிங் நகரை சேர்ந்தவர் மாணிக் பைக் (52). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், அப்பகுதி கமிட்டி தலைவராக இருந்தார். நேற்று அதிகாலை, மனைவி உமாவுடன் மாணிக் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாணிக் பெயரை சொல்லி
சிலர் கதவை தட்டினர். தங்களுக்கு உதவி வேண்டும் என்று சத்தமாக கூறினர். இதனால் மாணிக்கும் உமாவும் எழுந்து வந்து கதவை திறந்தனர். அப்போது, 2 அடி தூரத்தில் வெளியே நின்றவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாணிக்கை சரமாரியாக சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து இறந்தார். தன் கண் எதிரே கணவர் சுடப்பட்டதை பார்த்து உமா அலறினார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். மாணிக்கின் மகன் மிருதுல், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. திரிணாமுல் கட்சியை சேர்ந்த சவுகத் மொல்லா கூறுகையில், ‘மாணிக் கொலைக்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அவரை குறி வைத்து அழித்து விட்டனர்ÕÕ என்றார். இந்த குற்றசாட்டை மார்க்சிஸ்ட் மறுத்துள்ளது. உட்கட்சி பூசலால்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சி கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக