ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி சுற்றுப்பயணம் செய்த இத்தாலி பயணிகள் போஸ்கோ பாலோ மற்றும் கிளாடியோ கொலங்கோவை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றனர். இதில் கிளாடியோ மட்டும் 25ம் தேதி விடுக்கப்பட்டார். கொலங்கோவை விடுவிக்க மாவோயிஸ்ட் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர்களை விடுவித்தல், போலீஸ் வேட்டையை நிறுத்துதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை
ஏற்றால் தான் இத்தாலியரை விடுவிப்போம் என மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்தனர்.இந்நிலையில், போலீஸ் தாக்குதல் நடத்தி இத்தாலியரை மீட்க முயற்சி செய்தால், அவரை கொன்று விடுவோம் என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், இத்தாலியரை மீட்க மாவோயிஸ்ட்களுக்கு எதிராக போலீசார் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி நடத்தினால் பயங்கர விளைவு ஏற்படும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கடத்தியவரை விடுவிக்க மாட்டோம்Õ என்று மாவோயிஸ்ட் தலைவர் சபியாச்சி பாண்டா கூறியுள்ளார்.
இந்த மிரட்டலை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் மாவோயிஸ்ட் பிரதிநிதிகளுடன் நேற்றிரவு அவசர பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த பேச்சில் எந்த முடிவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று மாநில உள்துறை செயலாளர் பெகேரா தெரிவித்தார். பதற்றமான சூழ்நிலையில் கோராபுத் மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட எம்எல்ஏ ஜினா ஹிகாகா நிலையும் என்ன என்பது தெரியாமல் உள்ளது.
சிறையில் உள்ள மாவோயிஸ்ட்களை விடுவிப்பது உள்பட 3 நிபந்தனைகளை ஏற்றால்தான் பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்போம் என அவரை கடத்திய மாவோயிஸ்ட் அமைப்பான சாசிமுலியா ஆதிவாசி சங்கம் கூறியுள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து ஒடிஷா அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையில் கடத்தப்பட்ட எம்எல்ஏவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாயின. இதை திட்டவட்டமாக மறுத்த அரசு, அந்த தகவல்கள் வெறும் புரளி என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக