புதுடெல்லி:தமிழகத்தின் காரைக்குடியைச் சார்ந்த நீதிபதி ஃபக்கீர் முஹம்மது இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எச். கபாடியா நேற்று(திங்கள்கிழமை) காலை கலீஃபுல்லாஹ்வுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 3-வது நீதிபதியாக கலீஃபுல்லாஹ் தற்பொழுது பொறுப்பேற்றுள்ளார். நீதிபதிகள் அல்டமஸ் கபீர், அஃப்தாப் ஆலம் ஆகியோர் இதர 2 நீதிபதிகள் ஆவர். தமிழகத்திலிருந்து நீதிபதி பி.சதாசிவத்துடன் பணியாற்றும் 2-வது நீதிபதி கலீஃபுல்லாஹ் ஆவார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1951-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி பிறந்த இப்ராஹிம் கலிஃபுல்லா, 1975-ம் ஆண்டு முதல் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். தொழில் சட்டங்களில் கவனம் செலுத்திய கலீஃபுல்லாஹ் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வழக்கறிஞராக பணியாற்றினார். தமிழ்நாடு மின்சார வாரிய வழக்கறிஞராகவும் சேவையாற்றியுள்ளார். 2000 ஆண்டு மார்ச் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நிரந்த நீதிபதியாக கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார். பின்னர், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஏப்ரலில் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக