புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் ஸய்யத் அஹ்மத் காஸ்மியின் விடுதலைக்கான முயற்சிகளை தீவிரப்படுத்த ‘காஸ்மி சோலிடாரிட்டி கமிட்டி’ என்ற பெயரில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காஸ்மியின் மீது குற்றம் சுமத்தாமல் நீண்ட காலம் காவலில் வைப்பதை குறித்து கேள்வி எழுப்ப ஊடகங்கள் தயாராகவேண்டும் என்று இக்கமிட்டி கோரிக்கை
விடுத்துள்ளது.
காஸ்மியை கைது செய்தது முதல் அவருக்கு எதிராக போலீஸ் பரப்புரைச் செய்யும் பொய்யான செய்திகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் களமிறங்க வேண்டும்.
காஸ்மியின் மனைவி ஜஹானாராவுக்கு அவரது வங்கி கணக்கில் வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பாக போலீஸ் கூறும் தகவல் உண்மையை திரித்து வெளியிட்டதாகும்.
2012 மார்ச் வரை 19 லட்சம் ரூபாய் ஜஹானாராவின் அக்கவுண்டில் வந்ததாக கூறும் போலீஸ், இந்த பணம் எப்பொழுது முதல் வரத் துவங்கியது என்பதை விளக்கவில்லை. இந்த பணம் மரணமடைந்த முன்னாள் கணவரின் மகன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில்(யு.ஏ.இ) இருந்து அனுப்பப்பட்டதாகும். இது உண்மையை திரிக்கும் போலீஸாரின் முயற்சி என்று இண்டர்நேசனல் ஃபெடரேசன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸின் தெற்காசியா ப்ரோக்ராம் மானேஜர் சுகுமார் முரளீதரன் கூறினார்.
காஸ்மியின் மனைவி ஜஹானாராவின் பணம் வரத்து குறித்து ஆவணங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவது சாதாரணமான விஷயம். வெளிநாட்டில் இருந்து பணம் வருவதால் உளவாளிகளாக சித்தரிக்கும் போலீஸாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பிரபல பத்திரிகையாளர் ஸீமா முஸ்தஃபா கூறினார்.
இவ்வழக்கை விசாரணை நடத்தும் விசாரணை அதிகாரிகளின் நம்பகத் தன்மை குறித்து ஏற்கனவே கேள்வி எழுந்துள்ளது.
காஸ்மியை கைது செய்ததும், கைதை பதிவுச் செய்ததும் வெவ்வேறான நேரங்களாகும். போலீஸின் இந்த மோசடி நிரூபணமானால் வழக்கு தள்ளுபடிச் செய்யப்படும் என்று மூத்த வழக்கறிஞர் காலின் கோன்ஸால்வஸ் கூறினார்.
பல வருடங்களாக காஸ்மி உபயோகிக்கும் தொலைபேசி எண்களில் இருந்துதான் அவர் வெளிநாட்டிற்கு அழைத்துள்ளார். தாக்குதலை நடத்தும் எண்ணமுடையவர் இவ்வாறு செய்வார் என்று நம்ப இயலுமா? என்று ஃப்ரண்ட்லைன் மாதமிருமுறை இதழின் அசோசியேட் எடிட்டர் ஜான் செரியான் கேள்வி எழுப்பினார்.
மூத்த பத்திரிகையாளர்களான அஜித் ஸாஹி, குல்தீப் நய்யார், ஸஈத் நக்வி, பிரஃபுல் பித்வாய், இஃப்திகார் கிலானி, ஜெ.என்.யு பேராசிரியர் கமல் மித்ரா செனோய், சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி, நித்யா ராமகிருஷ்ணன், டி.கே.ராஜலெட்சுமி ஆகியோர் இணைந்து ‘காஸ்மி சோலிடாரிட்டி கமிட்டி’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
சமூக ஆர்வலர்களான மனீஷா சேத்தி மற்றும் மான்ஸி ஷர்மா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக