புதுடெல்லி:பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞானி டாக்டர்.கலீல் ஜிஸ்தி அஜ்மீர் சிறையில் இருந்து 19 ஆண்டுகள் கழித்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜிஸ்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி ஒரு நாள் இந்திய சுற்றுப் பயணத்திற்கு பிறகு ஜிஸ்தியின் விடுதலை சாத்தியமாகியுள்ளது. முன்னதாக, ஜாமீன் வழங்குவதற்காக உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருந்த ரூ. 1 லட்சம் உத்தரவாதம் மற்றும் அதற்கு இணையான
பத்திரங்களை விரைவு நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜமீல் ஜிஸ்தி சமர்ப்பித்தார்.
1992-ஆம் ஆண்டு தனது தாயாரை காண ஜிஸ்தி அஜ்மீருக்கு வந்தபொழுது உறவினர்களிடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜிஸ்தி கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் குடிமகன் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
வயது முதிர்ந்த, நோயால் அவதிப்பட்ட ஜிஸ்தியை விடுவிக்க மனித உரிமை பி.யு.சி.எல் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி அண்மையில் இந்தியாவுக்கு வந்தபொழுது ஜிஸ்தியின் விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விவாதித்தனர். இதையடுத்து, ஜிஸ்திக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. இதுபற்றிக் குறிப்பிட்ட ஜிஸ்தி, அஜ்மீருக்கு வருகை தந்ததற்காகவும், தம்மை விடுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் சர்தாரிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிறையில் இருந்து விடுதலையான ஜிஸ்தியை அவரது சகோதரர் ஜமீல் ஜிஸ்தி, இன்னொரு உறவினர் ஸய்யித் அன்வாருல் ஹக் ஆகியோர் வரவேற்றனர்.
விடுதலையான ஜிஸ்தி கூறியது: “நான் விடுதலையானதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அனைத்தும் அல்லாஹ்வுக்கே. பாகிஸ்தானில் வசிக்கும் எனது குடும்பத்தை விரைவில் காண்பதற்கு விரும்புகிறேன்.” என்று கூறிய ஜிஸ்தியிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சரப்ஜித் சிங் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “சரப்ஜித் சிங்கை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக