கராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.
இப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கராச்சி பிராந்தியத் தலைவர் முஹம்மத் ஹுஸைன் மெஹந்தி, "ஆஃபியா ஸித்தீக்கியின் வழக்கில் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதும் முற்றிலும் பாரபட்சமானதுமான தன்னுடைய போக்கை அமெரிக்க நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது " எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சுலோகங்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான பேரணியாளர்கள், ஆஃபியா ஸித்தீக்கியின் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வராமல் மௌனம் சாதிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கோழைத்தனத்தையிட்டுத் தமது அதிருப்தியை வெளிக்காட்டவும் தவறவில்லை.
2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஸ்னி காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க எஃப்.பி.ஐ. அதிகாரிகள் மீதும் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 செப்டெம்பர் மாதம் ஆஃபியா ஸித்திக்கிக்கு நிவ் யோர்க் நீதிமன்றம் 86 வருடச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக் குறித்து மேன்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று குழந்தைகளின் தாயான ஆஃபியா ஸித்தீக்கி தன்னுடைய குழந்தைகள் சகிதம் 2003, மார்ச் 30 ஆம் திகதி கராச்சியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.
பயங்கரவாதக் குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்கப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக மறுநாள் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
அதைத்தொடர்ந்து அவரைப் பற்றிய செய்திகள் மிக ரகசியமாகவே பேணப்பட்ட நிலையில், அவர் காபூலில் உள்ள பக்ராம் சித்திரவதை முகாமுக்கு இரகசியமாக இடமாற்றப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தகவல் தெரிவித்தன.
ஆஃபியா மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு போலியானது, நீதியான விசாரணை மறுக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளின் தாயான அவர் தொடர்ச்சியாக மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது என உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஆர்வலர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் உரத்துக் குரல் எழுப்பத்தொடங்கிய நிலையில், மேற்படி போலிக் குற்றச்சாட்டின் பேரில், ஆஃபியா 2008 ஜூலை மாதம் நிவ்யோர்க்குக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு 2010 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் பின் நிவ்யோர்க் கார்ஸ்வெல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆஃபியாவின் உடல்நிலையும் மனோநிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சகோதரியைச் சந்திக்க பலதடவை அனுமதி கோரியும் சிறை நிர்வாகத்தால் தொடர்ந்தும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் ஆஃபியாவின் சகோதரி டாக்டர் ஃபௌஸியா ஸித்தீக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"கார்ஸ்வெல் சிறைச்சாலை மனிதத்துவத்துக்கு முற்றிலும் எதிரான நிலைமையில் இருக்கிறது. உண்மையான நீதிக்கும் மனிதாபிமானதுக்கும் எதிரான இத்தகைய பாரபட்சமான நிலைமையை எதிர்த்து, நீதியையும் மனித நேயத்தையும் விரும்பும் அமெரிக்கப் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும்" என்று டாக்டர் பௌஸியா ஸித்தீக்கி அமெரிக்க மக்களை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக