காஸா: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) காஸா எல்லைக்கருகில் "ஜெரூசலத்தை நோக்கிய உலகப் பேரணி" என்ற தலைப்பில் 1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புக்குள்ளான நிலப்பகுதியை நோக்கி 'இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் பேரணி'யொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட பலஸ்தீன் இளைஞர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 20 வயதான முஹம்மத் ஸகூத் படுகொலை செய்யப்பட்டதோடு,ஏராளமானோர்
படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காஸா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் அத்ஹம் அபூ ஸில்மிய்யா கருத்துரைக்கையில், "துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட அதிக இரத்த இழப்பினால் முஹம்மத் ஸகூத் உயிரிழந்திருப்பதோடு, மேலும் 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் அநேகருடைய நிலைமை கவலைக்கிடமாய் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்தவர்களில் 'அல் வத்ன்' உள்ளூர் வானொலிச் சேவையின் செய்தியாளர் யூஸுஃப் ஹம்மாதும் ஒருவர் என சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குப் பலஸ்தீன் பொதுமக்கள் தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பங்குபற்றிய பேரணி நிகழ்வுகள் குறித்து வானொலியில் நேர்முக வர்ணனை மூலம் செய்தி அளித்துக்கொண்டிருந்தபோதே மேற்படி ஊடகவியலாளர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக