லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் நிறுவப்பட்ட தலித் நினைவிடங்கள் மீது கைவைத்தால், மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையை அகிலேஷ் அரசு சந்திக்க நேரிடும் என உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அகிலேஷ், சிலைகளை அல்ல, அதன் அருகிலுள்ள இடத்தில் மருத்துவமனைகள் கட்டப்போவதாக தெரிவித்துள்ளார். உ.பி., சட்டசபை தேர்தல் தோல்விக்குப்பின் முதன்முறையாக, சட்டமேதை டாக்டர். அம்பேத்கரின் 121வது பிறந்த நாள் விழாவில் மாயாவதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின் போது நிறுவப்பட்ட தலித் நினைவிடங்கள், சிலைகள் மற்றும் பூங்காக்கள் மீது அகிலேஷ் அரசு கைவைக்க நினைத்தால், மாநிலம் முழுவதும் மட்டுமல்ல, நாடு முழுவதும் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். முந்தைய முலாயம் சிங் ஆட்சியின் போது, அப்போதைய சமாஜ்வாடி அரசு, உ.பி.,யில் நிறுவிய சிலைகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை தாங்கள் ஏதும் செய்யவில்லை. இதிலிருந்து அகிலேஷ் அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக டில்லி வந்த உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவிடம், மாயாவதியின் எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட எந்த சிலையும் சேதப்படுத்தப்படாது என தான் பதவியேற்ற முதல் நாளிலேயே கூறியுள்ளதை நினைவுகூர்ந்தார். கடந்த பகுஜன் ஆட்சியின் போது, சுற்றுச்சூழல் குறித்து எவ்வித கவலையும் இன்றி மாயாவதி பூங்காக்களையும், சிலைகளையும் நிறுவியுள்ளதாக தெரிவித்த அகிலேஷ், சிலைகள் அருகிலுள்ள இடங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மருத்துவமனைகளை அமைப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக