அமெரிக்க அரசால் 10 மில்லியன் டாலர் (சுமார் 50 கோடி ரூபாய்கள்) தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தய்பா மற்றும் ஜமாஅத்துத் தாவா தலைவர் ஹஃபீஸ் சயீத் உண்மையில் தீவிரவாதிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தவே உதவினார் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்ட மும்பை 26/11 சம்பவத்தின் சூத்திரதாரி என்று இந்தியா ஹஃபீஸ் சயீதை குறிப்பிட்டிருக்கையில், அதை ஏற்று, அமெரிக்காவும் அவர் தலைக்கு சுமார் 50 கோடி ரூபாய்கள் விலை
வைத்திருக்கும் நிலையில், தீவிரவாத எதிர்ப்பு பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உண்மையில் சயீத் அச்சமயம் பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளைச் சந்தித்து தீவிரவாதிகளைத் திருத்துவதற்கே ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறியுள்ளார். தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தும் அந்தச் சேவைக்கு சயீத் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.பஞ்சாப் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு துப்பறியும் காவல் அதிகாரி ஒருவரும் மேற்கண்ட மைய அரசு அதிகாரியின் கூற்றை உறுதிபடுத்தியுள்ளார். தங்களுடைய அறிவார்ந்த அணுகுமுறையாலும் நடவடிக்கைகளாலும் தீவிரவாதிகள் பலரையும் திருத்தி சட்டத்துக்குட்பட்ட குடிமகன்களாக ஜமாஅத்துத் தாவா மாற்றியது என்றார் அந்த காவல் அதிகாரி.
இதற்கிடையில் "நீதிக்கான வெகுமதி" என்னும் திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு அறிவித்துள்ள சயீத் தலைக்கான வெகுமதி பல மாத ஆய்வுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.
தாம் இந்தியாவுடன் நெருக்கமாகப் போகிறோம் என்பதை பாகிஸ்தானுக்கு அறிவிக்கும் அமெரிக்க யுக்தியே இந்த அறிவிப்பு என்று உலக அரசியல் நோக்கர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக