திங்கள், ஜூலை 30, 2012

தானே புயல் நிவாரணத்தில் பெரும் மோசடி !

massive fraud Thane storm relief fund!கடலூர்:கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய தானே புயலில் கடலூர் மாவட்டம் மிகவும் பாதிப்பிற்குள்ளானது. பல்லாயிரக்கணக்கானோர், வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியில் பெரும் மோசடி நிகழ்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் இருந்து
தெரியவந்துள்ளது.
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முழுமையாக சேதம் அடைந்த வீட்டிற்கு, 5,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வீட்டிற்கு, 2,500 ரூபாயும் வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
புயலால், ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு மட்டும், நிவாரணம் கொடுத்தால் பிரச்னையாகும் என ஆளும் கட்சியினர் கூறியதைத் தொடர்ந்து, ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அப்போதே பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனைக் கண்டித்து பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்தன. ஆனால் அதிகாரிகள், நிவாரண உதவித் தொகை நேர்மையாக வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினர். மக்கள் போராடி ஓய்ந்தனர்.
இந்நிலையில், கடலூர் நகராட்சிக்குட்பட்ட மம்சாப் பேட்டையைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவர், தான் சார்ந்த 44வது வார்டில், எத்தனை பேருக்கு புயல் நிவாரணம் வழங்கப்பட்டது, எவ்வளவுத் தொகை வழங்கப்பட்டது என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டு, நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தார். அதற்கு, நகராட்சி அலுவலகத்தைச் சேர்ந்த தகவல் அதிகாரி கொடுத்துள்ள பதிலில், கடலூர் நகராட்சி, 44வது வார்டில், ஒவ்வொரு கார்டுக்கும் தலா, 2,500 ரூபாய் என, 1,418 ரேஷன் கார்டுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மொத்தம், 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். அதனுடன் இணைத்து வழங்கிய பயனாளிகளின் பட்டியலில், 1,220 பேருக்கு நிவாரணம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி, தலா, 2,500 ரூபாய் என, 1,418 ரேஷன் கார்டுக்கு, மொத்தம், 35 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்க வேண்டும் அல்லது பயனாளிகள் பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, 1,220 பேருக்கு, 30 லட்சத்து 50 ஆயிரம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நிவாரணம் வழங்கியதோ, 28 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே. அதிலும், பயனாளிகள் பட்டியலில் ஒரே கார்டிற்கு இருமுறை நிவாரணம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ‘தானே’ புயல் நிவாரணத்தில், பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சட்டப்பேரவையில் தானே புயல் வீசிய வேளையில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவர் பேசுகையில், “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணியதாக வரம்பு கடந்து அ.இ.அ.தி.மு.க அரசை புகழ்ந்தது’ குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக