திங்கள், ஜூலை 30, 2012

லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவின் ஓட்டை உடைசல் ரயில்கள் !

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள ரயில்களில் முக்கால்வாசி ரயில்களில் அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லை. குறிப்பாக பகல் நேர ரயில்களில் மகா கொடுமையான சித்திரவதையுடன்தான் பயணிகள் பயணிக்கின்றனர். லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் வகையில்தான் நமது ரயில்களில் பெரும்பாலானவை உள்ளது என்பது வேதனைக்குரியது
.
உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே என்ற பெருமை, தனியாக பட்ஜெட் போடும் இந்தியாவின் ஒரே துறை என்று பல பெருமைகளுடன் கூடியது இந்திய ரயில்வே. ஆனால் இவ்வளவு பணம் சம்பாதிக்கும் ரயில்வே, தனது ரயில்களை எந்த அளவுக்கு மோசமாக் பரமாரிக்கிறது என்று பார்த்தால் பெரும் வேதனைதான் மிச்சம்.
இந்த வேதனையின் உச்சத்தைத்தான் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், உலகிலேயே மிகப் பெரிய திறந்த வெளி கழிப்பறை இந்திய ரயில்கள் என்று கூறியிருந்தார்.
ரயில் நிலையங்களும் சரி, ரயில்களும் சரி 'பெர்பக்ட்' என்று சொல்ல முடியாத அளவுக்குத்தான் ஓட்டை உடைசலாக உள்ளன.
தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். தமிழகத்தின் தென் பகுதியில் ரயில்கள் அனைத்துமே ஒரு நாள் கூட உரிய நேரத்தில் ஓடியதில்லை. காரணம், என்ஜின் கோளாறு. திருச்சியிலிருந்து நெல்லை வரையிலான ரயில் மார்க்கத்தில் ஓடும் பல ரயில்களின் என்ஜி்ன்களும் அடிக்கடி பழுதாவதை சகஜமாக காணலாம். குறிப்பாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் அடிக்கடி பழுதடைவது சகஜமான ஒன்று.
அதேபோல பகல் நேரத்தில் ஓடும் வைகோ, லால்பாக் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பதை விட மாட்டு வண்டியில் ஏறி நிம்மதியாகப் போய் விடலாம். அந்த அளவுக்கு கொடுமையான பயணம் இந்த ரயில்களில் அனுபவிக்க முடியும்.
வரைமுறையில்லாமல் எல்லாப் பயணிகளுமே ரயிலில் ஏறி விடுவார்கள். இதை டிடிஆர்கள் பெரும்பாலும் தட்டிக் கேட்பதில்லை. கழிப்பறைகள் நாறிக் கிடக்கும். முறையாக தண்ணீர் வராது. மின்விசிறிகள் சரிவர காற்றைத் தராது. இப்படி ஏகப்பட்ட கோளாறுகள்.
சரி இரவு ரயிலில் போகலாம் என்றால் எலித் தொல்லை, மூட்டைப் பூச்சித் தொல்லை என சகலவிதமான தொல்லைகளும் இருக்கிறது. ஒறுமுறை ஏசி பெட்டி ஒன்றில் ஏசி சரியாக இயங்கவில்லை. இதை பயணிகள் எடுத்துக் கூறி பெட்டியை மாற்றுங்கள் என்று கூறியபோது அது எங்களிடம் இல்லை. அடுத்த திருச்சி வந்த பிறகுதான் மாற்ற முடியும் என்று கூறி விட்டார்கள்.
அதேபோல ஒரு ரயிலின் ஏசி பெட்டியில் மூட்டைப் பூச்சித் தொல்லை தாள முடியாமல் பயணிகள் கூக்குரலிட, உடனே கொஞ்சமும் முன்யோசனையின்றி அந்த ஏசி பெட்டியில் சரக் சரக்கென பூச்சி மருந்தை அடித்து பயணிகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தினர் ஊழியர்கள். மயங்கி விழாத குறையாக பயணிகள் கடும் வேதனையுடன் மூட்டைப் பூச்சித் தொல்லை மற்றும் பூச்சி மருந்தின் நெடியுடன் பயணித்தனர்.
அடுத்து சாப்பாடு. ரயிலில் தரப்படும் சாப்பாட்டை சாப்பிடுவதற்குப் பதில் பேசாமல் நாலு கடலை மிட்டாய் பாக்கெட்களை வாங்கி வைத்துக் கொண்டு பயணிக்கலாம். விலைதான் பெரிதாக இருக்கிறது. ஆனால் தரம் கொடுமையிலும் கொடுமை. விதம் விதமாக சாப்பாடுகளை விற்கிறார்கள். ஆனால் எதையுமே வாயில் வைக்க முடியாது. அதுவே, ரயில்வே பிளாட்பாரத்தில் உள்ள தனியார் ஹோட்டல்களில் அமர்க்களமான சாப்பாடு தருகிறார்கள், விலைதான் மிகக் கடுமையாக இருக்கிறது. இவர்களுக்குள் என்ன டை அப் என்று தெரியவில்லை.
ரயில் எங்காவது பழுதடைந்து நின்றால் முறைப்படியாக பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வசதி எந்தப் பெட்டியிலும் இல்லை. பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளில் ஸ்பீக்கர் வைத்திருப்பது போல ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு ஸ்பீக்கரை வைத்து ரயில் எங்காவது நின்றால், ஏன் நிற்கிறது, எப்போது புறப்படும், என்ன பிரச்சினை என்பதை சொல்லலாம் இல்லையா.. அதைக் கூடவா ரயில்வேக்குச் சொல்லித் தர வேண்டும்.
ரயிலில் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று சட்டமே உள்ளது. ஆனால் இதைச் செய்வதற்காகவே ரயிலில் பயணிக்கும் மக்கள் நிறையப் பேர் உண்டு. இதைக் கண்காணித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே முன்வருவதில்லை. குறிப்பாக டாய்லெட்டுகளில் மறைந்து கொண்டு புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
குறைந்த கட்டணத்தில் தொலை தூரப் பயணம் என்பதற்காக ஆடு மாடுகளை அடைத்து ஏற்றிச் செல்வது போலத்தான் இப்போதைய ரயில் பயணங்கள் இந்தியாவில் உள்ளன. இதற்கு பயணிகளுக்கு நிறைய வசதி செய்து கொடுத்து கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் கூடப் பரவாயில்லை, நிச்சயம் பயணிகள் அதிருப்தி அடைய மாட்டார்கள், மாறாக ரயில்வேயே பாராட்டவே செய்வார்கள்.
ரயில் பயணங்களின் பாதுகாப்புக்குத்தான் இந்த ஆண்டு முக்கியத்துவம் தரப் போவதாக ரயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 50 பேரின் உயிர் பறி போயுள்ளது.
குறைபாடுகளைக் களைந்து பயணிகள் நிம்மதியுடன் பயணிக்க வழி செய்ய வேண்டும் ரயில்வே என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக