வெள்ளி, ஜூலை 20, 2012

போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மருந்து சோதனை: 12 பேர் பலி !

புதுடெல்லி:மனிதர்களை கினியா பன்றிகளைப் போல மருந்து பரிசோதனைக்கு பயன்படுத்தியது தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு வந்த ஏழை நோயாளிகளிடம் மருந்து பரிசோதனை நடத்தியதில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மருந்து பரிசோதனை நடத்தப்பட்ட 279
நோயாளிகளில் 215 பேரும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரின்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
12 பேர் மருந்து அளிக்கப்பட்டதை தொடர்ந்து பலியானதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்கள் இலவச சிகிட்சைக்காக மருத்துவமனையில் அபயம் தேடிய அப்பாவி ஏழைகள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுவிற்கு பதிலாக கிடைத்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தன்னை மருந்து பரிசோதனைக்கு மருத்துவமனை அதிகாரிகள் உட்படுத்தியதாகவும் அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பியதாகவும் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதியுறும் ராமதர் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு மருந்தை தந்தனர். பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததால் வாசிக்க தெரியவில்லை” என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
தனது கணவரை மருத்துவமனை அதிகாரிகள் தவறான மருந்தை கொடுத்து கொலைச் செய்ததாக போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டு இன்னொரு நபரான சங்கர்லாலில் மனைவி லட்சுமி பாயீ குற்றம் சாட்டுகிறார்.
உயிர்பிழைக்க மாட்டார்கள் என உறுதியான நோயாளிகளிடம் மருத்துவர்கள் மருந்து சோதனை நடத்தியதாகவும், ஒவ்வொரு நோயாளியிடமும் சோதனை நடத்துவதற்கு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மருந்து கம்பெனிகள் பணம் அளிக்கின்றனர் என சமூக ஆர்வலர் ரசனா தின்கரா கூறுகிறார்.
அதேவேளையில் மருந்து பரிசோதனை குறித்து பல்வேறு ஏஜன்சிகள் மாறுபட்ட புள்ளிவிபரங்களை அளித்துள்ளன. செண்ட்ரல் க்ரேடு ஸ்டாண்டர்டு ஆர்கனைசேசன்(சி.டி.எஸ்.சி.ஒ) புள்ளிவிபரப்படி போபால் மெமோரியல் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் செண்டரில்(பி.எம்.ஹெச்.ஆர்.சி) 7 மருந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை ஆவணங்களில் 10 சோதனைகள் நடத்தப்பட்டதாக காணப்படுகிறது. 13 சோதனைகள் நடத்தப்பட்டதாக மருந்து கம்பெனிகள் அமெரிக்க அரசுக்கு அளித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மொத்தம் 3 பரிசோதனைகள் மட்டுமே பி.எம்.ஹெச்.ஆர்.சியில் நடந்ததாக ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா(டி.சி.ஜி.ஐ) கூறுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஹெல்த் ரிசர்ச் பிரிவு செயலாளர் டாக்டர் வி.எம்.கட்டக் தெரிவித்துள்ளார். மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை கினியா பன்றிகளைப் போல உபயோகிப்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்தியபிரதேச பா.ஜ.க அரசையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இந்தியாவில் ஏழை மக்களிடம் மருந்து கம்பெனிகள் பெருமளவில் மருந்து பரிசோதனை நடத்துவதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான விசாரணையின் போது ஏழு வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக