லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற இலக்குடன், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க., பக்கம் தாவிய, அக்கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., பாண்டியராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்ற ஆறு பேரும், அதிருப்தி அடைந்துள்ளனர்.
நிராகரித்து விட்டார்:
விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பாண்டிய ராஜன். இவர், தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, விஜயகாந்தி டம், 'சீட்' கேட்டார். ஆனால், கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிதான் வழங்கப்படும் எனக் கூறி, அவரின் கோரிக்கையை, விஜய காந்த் நிராகரித்து விட்டார். இதையடுத்து, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், ஏழாவது ஆளாக முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க., ஆதரவாளராக மாறினார், பாண்டியராஜன். அதுமட்டுமின்றி, தன் காரிலும், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினார். அ.தி.மு.க., கரைவேட்டி அணிந்து, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, தனக்கு நிச்சயம், அ.தி.மு.க.,வில், சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். சீட் கொடுக்கப்பட்டால், தற்போதைய, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்யவும், தயாராக இருந்தார். அதனால், விருதுநகர் தொகுதியில், மகளிர் குழுக்களை உருவாக்கி, நிதி உதவி அளித்து வந்தார். தன், திருமண நாளை ஒட்டி, சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, தன் மனைவியுடன் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினராக்கும்படி கேட்டு, கடிதம் ஒன்றையும், முதல்வரிடம், பாண்டியராஜன் வழங்கினார்.