வியாழன், பிப்ரவரி 27, 2014

பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு பற்றி புகார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை


பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், பணம் பெற்றுக்கொண்டு தேர்தல் கருத்துக்கணிப்புகளில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமாக சில நிறுவனங்கள் செயல்படுவதாக 'ஸ்டிங் ஆபரேஷன்' என்னும் ரகசிய நடவடிக்கை மூலம் இந்தி செய்தி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியது. 



இதில் பிரபல நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது, தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினையை தேர்தல் கமிஷனிடம் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தலைமை ஏற்றுள்ள காங்கிரஸ் எடுத்துச் சென்றுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவுசெய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.



இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.சி.மிட்டல் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், "ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கருத்துக்கணிப்புகள் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில், இந்த பிரச்சினையில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்; கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதை கட்டுப்படுத்தி, பொருத்தமான அறிவுரைகளை வெளியிட வேண்டும்" என கூறி உள்ளார்.

மேலும், இந்திய அரசியல் சட்டம் பிரிவு 324 வழங்கியுள்ள அதிகாரத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்தி, பாராளுமன்றத்தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்ற ஒரு கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சியும் வைத்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், "கருத்துக்கணிப்புகளை தேர்தல் கமிஷன் ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால் அவற்றை தடை செய்யக்கூடாது" என தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பாக செய்தி சேனல், 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தி அம்பலப்படுத்தி இருப்பது பற்றி, தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்திடம் டெல்லியில் நிருபர்கள் நேற்று கேள்விகள் எழுப்பினர். அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டனர்.

அதற்கு அவர், "நிச்சயமாக இந்த பிரச்சினையை கவனிப்போம். தீர ஆராய்வோம். என்ன சட்ட நடவடிக்கை தேவைப்படுகிறதோ, அது எடுக்கப்படும்" என பதில் அளித்தார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பான பொதுவான கருத்தையும் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார்.

அப்போது அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொறுத்தமட்டில், தேர்தல் கமிஷன் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இன்றல்ல, 10 வருடங்களுக்கு முன்பு, 2004-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய பின்னர்தான் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நாங்கள் பரிந்துரைகளையும் செய்தோம். இதற்கிடையே அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்றோம். அவையெல்லாம் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும்" என கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக