வெள்ளி, ஜூலை 27, 2012

வேலைக்கு ஆள் வைத்து லஞ்சம் வசூல் செய்த கோவை செக்போஸ்ட் அதிகாரிகள் !

கோவை அருகே, போக்குவரத்துத் துறை செக்போஸ்ட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தனியாக சம்பளத்துக்கு ஆள் வைத்து லஞ்ச பணம் வசூலித்தது, அம்பலமாகியுள்ளது. கோவை - பாலக்காடு ரோட்டில், திருமலையாம்பாளையம் பிரிவு அருகேயுள்ள ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரெய்டு நடத்தினர். அப்போது, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்
சையதுமுர்துஜா, 54, உதவியாளர் காந்திமகேஸ்வரன், 46, பாலகிருஷ்ணன், 53, ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத பணம் 35,850 ரூபாய் கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: செக்போஸ்ட்டில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஒரு ஷிப்ட் ஆகவும், இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரை ஒரு ஷிப்ட் ஆகவும் இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். கோவை - பாலக்காடு ரோட்டில் ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் அமைந்துள்ளதால், கேரளா செல்லும் வாகனங்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தற்காலிக "பர்மிட்' வழங்கப்படுகிறது. மேலும், அதிக பாரம் ஏற்றி செல்வது, பர்மிட் இல்லாமல் செல்வது, சாலைவரி செலுத்தாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், பணியாற்றும் அதிகாரிகள் வாகனங்களில் முறைகேடாக பணம் வசூலித்துள்ளனர்.

வாகனங்களை நிறுத்தி பணம் வசூலிப்பதற்கு தனியாக சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்துள்ளனர். தற்காலிக "பர்மிட்' வழங்கவும், வாகனங்களை பதிவு செய்யவும் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கின்றனர். அபராதம் விதிக்கும் போது அரசுக்கு செலுத்தும் தொகையை குறைத்து, முறைகேடாக அதிக பணம் பெறுகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வசூலித்து கொடுக்கும், சம்பள ஆள் அலுவலகத்திற்கு வெளியில் இருந்ததால் தப்பியோடி விட்டார். இவ்வாறு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

துறைரீதியான நடவடிக்கை? கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் கூறுகையில், ""ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்திய போது, கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, போக்குவரத்து கமிஷனருக்கு அனுப்பப்படும். அதன்பின், துறைரீதியான நடவடிக்கை பற்றி போக்குவரத்து கமிஷனரிடம் இருந்து அறிவிப்பு வரும்,'' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக