வெள்ளி, ஜூலை 20, 2012

போராட்டக்காரர்கள் தாக்குதல் தீவிரம்: சிரியா அதிபர் ஆசாத் குடும்பத்துடன் தலைமறைவு !

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 3 ராணுவ உயர் அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புரட்சி படை கொன்றது. மேலும், ஈராக், துருக்கி எல்லைப் பகுதியில் நாலாபுறமும் உள்ள முக்கிய நகரங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகரம் டமாஸ்கசின் வீதிகளில் மக்கள் குவிந்து போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட டமாஸ்கஸ் போராட்டக்காரர்களின் வசமாகும் நிலையில் உள்ளது. எனவே, அதை தங்கள் பிடியில் வைத்து கொள்ள ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
 
போராட்டக்காரர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீசி வருகிறது. ராக்கெட் குண்டுகளும் வீசப்படுகின்றன. இருந்தும் புரட்சி படையின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
 
இதனால் அதிபர் ஆசாத்தின் அரசு ஆட்டம் காணும் நிலையில் உள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ராணுவமும், அரசின் உயர் அதிகாரிகளும் தீவிரமாக உள்ளனர்.
 
இந்த நிலையில் அதிபர் ஆசாத் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவி, மற்றும் 3 குழந்தைகளையும் காணவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை.
 
சமீபத்தில் நடந்த புரட்சிபடை தாக்குதலில் ராணுவ மந்திரி கொல்லப்பட்டார், அவர் ஆசாத்தின் மைத்துனர் ஆவார். அவருக்கு பதிலாக நேற்று புதிய மந்திரி பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சியில் ஆசாத் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது டி.வி.யில் ஒளிபரப்பானது. ஆனால், பதவி ஏற்பு விழா, எங்கு நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை.
 
அதே நேரத்தில் ஆசாத் இன்னும் உயிருடன் இருக்கிறார். பாதுகாப்புடன் இருப்பதாக செய்தி வெளியிட்டது. இதற்கிடையே, சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக லெபனானுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
 
டமாஸ்கசில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் எல்லை பகுதியில் உள்ள மாஸ்னாவில் இருந்து தனியார் கார்கள் மற்றும் பஸ்கள் மூலம் குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக