வியாழன், ஜூலை 26, 2012

சிரியா:அலப்போவில் போராட்டம் தீவிரம் – சிறையில் கூட்டுப் படுகொலை !

Syria crisis- clashes and prison mutiny in Aleppoடமாஸ்கஸ்:சிரியாவின் நகரமான அலப்போவில் சிரியா அரசு ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. ஸலாஹுத்தீன், ஸூக்காரி ஆகிய பகுதிகளை புரட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியதாக அரசு ராணுவம் அறிவித்துள்ளது. அலப்போவின் வடக்குப் பகுதியில் உள்ள சிறையில் அரசு ராணுவம் கலவரத்தை தூண்டிவிட்டு பின்னர் எட்டுபேரை சுட்டுக்
கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
சிறையில் நடக்கும் அநீதங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அலப்போவில் கடுமையான போராட்டம் நடப்பதாகவும், ஒரு புரட்சியாளர் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை கண்காணிப்புக் குழு கூறுகிறது.
இதனிடையே, சிரியா அரசு இரசாயன ஆயுதங்களை மக்கள் மீது பிரயோகித்தால் உலக நாடுகளுக்கு பதில்சொல்ல வேண்டிவரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகள் மீது மட்டுமே இரசாயன ஆயுதங்களை பிரயோகிப்போம் என நேற்று முன்தினம் சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதன்மூலம் சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பீதிவயப்பட்டுள்ளன. சிரியாவின் இரசாயன ஆயுதங்களின் ரகசியங்கள் குறித்து கூடுதலாக அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் தெரியாததால் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அல் அரேபியா கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக