செவ்வாய், ஜூலை 24, 2012

நோன்பை நோற்றபடியே இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த ஹஷிம் ஆம்லா !


 லண்டன் -  தென் ஆஃப்ரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்று வரும் முதல் ஐநாள் மட்டைப் பந்தாட்டத்தில் தென் ஆஃப்ரிக்காவின்  ஹாஷிம் அம்லா 311 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். தென் ஆஃப்ரிக்க வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை இதன்மூலம் அவர் சாதித்துள்ளார். மேலும் 300 ஓட்டங்கள் குவித்த முதல் தென் ஆஃப்ரிக்கராகவும் அவர் திகழ்கிறார். 
இதற்கு முன்பு அந்த அணியின் டி வில்லியர்ஸ் எடுத்த 278 ஓட்டங்களே அந்த அணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக
இருந்தது. 

29 வயதாகும் ஆம்லா இதுவரை 60 ஐநாள் ஆட்டங்களில் பங்கேற்று 5000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். அவருடைய சராசரி 50.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஐநாள், ஒருநாள், 20-20 என்று எல்லாவகை மட்டைப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கும் ஆம்லா ஒருநாள் ஆட்டங்களிலும் தரவரிசையில் முதலிரு நிலையில் இருந்து வருகிறார்.

“தென் ஆஃப்ரிக்காவின் மிகச் சிறந்த மட்டைப்பந்தாட்டத் திறமையாளர் ஆம்லா” என்கிறார் ஹட்சன். தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட்டின் தேர்வுக்குழு அமைப்பாளரான அவர் மேலும் சொல்கிறார். “அவருடைய அமைதியான சுபாவம். அதுதான் ஜொலிக்கிறது”

டர்பனில் பிறந்த ஆம்லா தென் ஆஃப்ரிக்க அணிக்குள் இடம்பிடித்தபோது ஏற்பட்ட ஆட்சேபங்களை நினைவு கூர்கிறார் தென்னாஃப்ரிக்க கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஏகே.கான். “அந்த ஆட்சேபணைகளையெல்லாம் மட்டையடி அடித்துவிட்டார்  மார்க்கப் பற்று மிக்க ஆம்லா” 

"311 ஓட்டங்கள் குவித்தது பற்றி என்ன உணர்கிறீர்கள்?" என்று கேட்ட போது ஹாஷிமின் பதில் "மகிழ்ச்சி, எனினும் தனிப்பட்ட சாதனைகளைக் காட்டிலும் அணியே பிரதானம்.  இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வெல்லுமானால் அதைவிட மகிழ்வேன்".

இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று சற்று முன் வரை இங்கிலாந்து அணி தனது இரண்டாவது மட்டையடிப்பில் 5 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்கள் பெற்றுள்ளது. இன்னும் ஏறத்தாழ 50 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில் தென் ஆப்ரிக்க அணி, மீதமுள்ள ஐந்து விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் துடிப்பில் உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்
இங்கிலாந்து 385 & 194/5 (72.0 ov)

தென் ஆப்ரிக்கா 637/2d



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக