ஞாயிறு, மார்ச் 18, 2012

சீனா உதவியுடன் கச்சத்தீவில் இலங்கை கடற்படை தளம்: 2 போர் கப்பல்களை நிறுத்தி வைத்தது


இந்திய கடல் பகுதியில் ராமேசுவரத்துக்கும், இலங்கைக்கும் இடையே கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவு வரை முன்பு ராமேசுவரம் மீனவர்கள் சுதந்திரமாக சென்று மீன் பிடித்து வந்தனர். கச்சத்தீவை மீன்களை உலற வைக்கும் இடமாகவும், ஓய்வு எடுக்கும் இடமாகவும் தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியா- இலங்கை இடையே நல்லெண்ண அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. என்றாலும் தமிழக மீனவர்களுக்காக மீன்பிடி உரிமை எப்போதும்போல் தொடர்ந்து நீடிக்கும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. 

ஆனால் இலங்கையில் உள்நாட்டு போர் மூண்டதும் 1980 ஆண்டுகளில் இருந்து கச்சத்தீவில் இலங்கை கடற்படை நடமாட்டம் அதிகரித்தது. தமிழக மீனவர்களை கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது குற்றம் சாட்டி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. 

கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்பும் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் நீடிக்கிறது. 

தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் நீடிக்கிறது. இந்த நிலையில் இலங்கை மீது சீனா கண் வைத்தது. தமிழகம்-இலங்கை இடையேயான பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சீனா இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டியது. 

மேற்காசிய நாடுகளுக்கு தனது கப்பல்கள் சென்றுவர இலங்கை துறைமுகங்களை பயன்படுத்திக் கொள்ளவும், இந்திய கடல் பகுதியில் தனது நடமாட்டத்தை அதிகப்படுத்தவும் இலங்கையை சீனா பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டது. 

இதற்காக இலங்கைக்கு சீனா மறைமுக உதவிகளை செய்து வந்தது. விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததும் 2009-ம் ஆண்டு முதல் கச்சத்தீவில் சீனா ஆதரவுடன் கடற்கடை தளம் அமைக்க முயற்சித்தது. ஆனால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் இலங்கை அதை மறுத்தது.

இந்த கடற்படை தளத்தை சீனா அமைத்து கொடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கச்சத்தீவு கடற்பரப்பில் நிரந்தரமாக 2 கடற்படை கப்பல்களையும் இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 

இதுபற்றி கொழும்பில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. ஒப்பந்தத்தை மீறும் வகையில் இலங்கை செயல்படுவதால் இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கச்சத்தீவில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளது தமிழக மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே இலங்கை தனது கடல் எல்லையில் நாச்சிக்குடா என்ற இடத்தில் நிரந்தர கடற்படை தளம் அமைத்துள்ளது. இதன் மூலம் மன்னார் வளைகுடா முதல் காங்கேசன் துறை வரையான கடற்பரப்பு முழுவதையும் இலங்கை தனது கண்காணிப்பில் கீழ் கொண்டு வந்துள்ளது. 

தற்போது பாக்ஜலசந்தியிலும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கச்சத்தீவில் கடற்படை தளம் அமைத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இலங்கையின் வடக்குப் பகுதியில் முறிகண்டியில் சிங்கள ராணுவத்துக்கு குடியிருப்பு அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இதற்கு வழங்கிய கட்டுமானப் பொருட்கள் கச்சத்தீவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் போரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட சீன அரசின் டென்ட் கொட்டகைகளும் கச்சத்தீவு கடற்படை தள அமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக