வெள்ளி, மார்ச் 23, 2012

இந்தியாவை மிரட்டும் வகையில் சீனா ராணுவம் ஒத்திகை: இமயமலையில் நவீன குண்டுவீச்சு

 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடுகிறது. சீனா ராணுவ வீரர்களில் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அருணாசல பிரதேசத்துக்குள் நுழைந்து எல்லை அடையாள குறிகளை வரைந்துவிட்டு செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவை மிரட்டும் வகையில் சீனா ராணுவத்தினர் இமயமலையை ஒட்டி திபெத் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். சீன விமானப்படையினர் குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஒத்திகையில் சீனாவின் 'ஜெ-10' ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த போர் ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடப்பது இதுவே முதல் தடவை என்றும், அதிகாரிகள் கூறியதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின்போது, லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கை நோக்கி வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல் கூறுகிறது.
இந்த ரக போர் விமானங்கள், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் உயரமான மலைப்பகுதியில் சென்று குண்டுகளை வீசும் திறன் படைத்தது ஆகும். சீனாவின் இந்த போர் ஒத்திகை இந்தியாவை மிரட்டும் வகையில் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய எல்லையில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு முழுமைக்கும் 4,057 கி.மீ. தூரத்துக்கு ராணுவ கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது எல்லையில் போர் ஒத்திகையையும் நடத்துகிறது. சீனாவின் இந்த செயல்கள் இந்தியாவையும் பதில் நடவடிக்கையில் இறங்கச் செய்யும் பலமான சமிஞ்சை (சிக்னல்) என்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக