ஞாயிறு, மார்ச் 25, 2012

இஸ்ரேல் மீது தீர்மானம் : ஐ.நாவில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா


ஜெனிவா : பாலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை கண்காணிக்க சர்வதேச விசாரனை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் அமெரிக்காவை தவிர அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் ஏற்கனவே இஸ்ரேலால் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் பலஸ்தீனர்கள் வாழும் எல்லை பகுதியிலும் இஸ்ரேல் குடியேற்ற திட்டங்களை மேற்கொள்வதாகவும் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுவதாகவும் புகார்கள் எழுந்தன.


இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் பாகிஸ்தான் தாக்கல் செய்தது. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, க்யூபா, வெனிசுலா, நார்வே, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்கா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 10 நாடுகள் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தகைய பதற்றத்தை அதிகரிக்கும் தீர்மானங்களை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் எத்துணையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அமெரிக்காவின் ஆதரவால் அவை பயனில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக