திங்கள், மார்ச் 26, 2012

இந்தியாவுக்கு எதிராக கஷ்மீர் பிரச்சனையை எழுப்பும் இலங்கை!


கொழும்பு:தமிழ் இன மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய ராஜபக்ஷேவின் இலங்கை அரசை கண்டிக்கும் ஐ.நா மனித உரிமை ஏஜன்சியின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கஷ்மீரின் எதிர்காலம் குறித்து இந்தியாவுக்கு பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் யாப அபயவர்த்தனா, இந்தியாவுக்கு எதிராக கஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப்போல சில நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கும் என்று கூறியுள்ளார். சீனா செய்தி நிறுவனமான சின்ஹுவா அபயவர்த்தனாவை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவை எதிர்த்து நேற்றும் இலங்கையில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ரகசிய அஜண்டாக்களில் இந்தியா விழுந்துவிட்டது என்றும், தீர்மானத்தை பலவீனப்படுத்தும் பொறுப்பையாவது இந்தியா செயல்படுத்த வேண்டும் என்றும் பிரபல இலங்கை நாளிதழான ஐலண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னர், தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் தீவிரவாதத்தின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆசியாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த ஒரே நாடு இந்தியா என்பதால் அண்டை நாடு என்ற சிறப்பை இந்தியாவுக்கு வழங்க தேவையில்லை என்று இலங்கை அரசில் முக்கிய கூட்டணி கட்சியான ஜெ.ஹெச்.யுவின் செய்தி தொடர்பாளர் உதய கம்மன்வில கூறியுள்ளார்.
அதேவேளையில் இந்தியாவை ஆதரித்து இலங்கை அமைச்சர் மைத்ரிபாலா சிரிசேனா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்க கோரும் பிரிவு தீர்மானத்தில் நீக்கப்பட்டது என்றும், இது இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்த உதவுவதாகும் என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச தலையீடு என்ற பிரிவை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இலங்கை அரசின் அனுமதியோடு ஆலோசனைகள் வழஙகலாம் என்பதை சேர்த்தது இந்தியாவின் அழுத்தம் மூலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக