வெள்ளி, மார்ச் 23, 2012

ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட 6 மடங்கு பெரிய ஊழல் எரிசக்தி துறையில். தணிக்கை துறையின் அதிர்ச்சி தகவல் !

 மத்திய கணக்கு தணிக்கை துறையானது மத்திய-மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரவு-செலவு விவரங்களை ஆய்வு செய்து அதில் நடந்துள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறது. 
சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தொலைத்தொடர்பு துறையில் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது. 

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா கைதாகி ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், தனியார் டெலிகாம் நிறுவன அதிகாரிகள் கைதாகி ஜாமீனில் விடுதலையானார்கள். 

ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறிய குற்றசாட்டின் பேரில் அதன் பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர். 

நாட்டின் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்டது. ஆனால் இதைவிட மத்திய அரசின் எரிசக்தி துறையில் நிலக்கரி ஒதுக்கீட்டில் இமாலய முறைகேடு நடந்து இருப்பதை மத்திய கணக்கு தணிக்கை துறை கண்டுபிடித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

இதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.10.7 லட்சம் கோடி என்று மதிப்பிட்டு உள்ளது. இது ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விட 6 மடங்கு பெரியதாகும். 

மத்திய அரசின் எரிசக்தி துறையானது நிலக்கரியை தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் மூலம் விற்பனை செய்கிறது. மொத்தம் 155 தனியார் நிறுவனங்கள் நிலக்கரி ஒதுக்கீடு பெற்று வருகிறது. இதில் கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் டெண்டர் இல்லாமலேயே நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 

இதன்மூலம் பிரபலமான 100 தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அப்போதைய சந்தை நிலவரப்படி விலை நிர்ணயம் செய்யாமலும் டெண்டர் இல்லாமலும் வெளிப்படையாக விலை நிர்ணயம் செய்து நிலக்கரி விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் ஆதாயம் அடைந்துள்ளன. இந்த வகையில் அரசுக்கு ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த முறைகேடு புகாரில் டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் பவர், ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனங்கள் பூஷன் ஸ்டீல், ஜெய்பாலாஜி, ராஷ்மி சிமெண்ட்ஸ், சத்தீஷ் கர் கேப்டிவ் கோல், உள்ளிட்ட பிரபல தனியார் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 

ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதன்பிறகு இஸ்ரோவில் எஸ்பேண்டு அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்ததை மத்திய கணக்கு தணிக்கை துறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த முறைகேடு விசாரணை இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருக்கிறது. 

தற்போது நிலக்கரி ஒதுக்கீட்டில் ரூ.10.7 லட்சம் கோடி முறைகேடு நடந்து இருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக