புதன், மார்ச் 28, 2012

போர் பீதியாலும், தடையாலும் தளராத ஈரான் மக்கள் !

டெஹ்ரான்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஏற்பட்ட கடுமையான தடைகளோ, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற பீதியோ ஈரான் மக்களை தளரச் செய்யவில்லை. டெஹ்ரான் உள்பட ஈரான் நகரங்களில் மக்களின் மாமூல் வாழ்க்கையை இவை எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாராசீக புதுவருடத்தை வரவேற்கும் மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள். புதிய நெருக்கடியும் தாமதிக்காமல் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும்
அவர்களுக்கு உள்ளது. அதேவேளையில் பிரச்சனைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் சூழல் உருவாக கூடாது என சாதாரண மக்கள் விரும்புகின்றனர். அவர்களில் பலரும் அதனை வெளிப்படையாக கூறவும் தயங்கவில்லை.
போராட்ட வீரியத்தின் மூலம் எதிரியின் தாக்குதலை முறியடிக்க முடியும் என்று நம்பினாலும் மோதல் சூழலை தணிக்கவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
‘போரும் தடைகளும் புதியதல்ல. சிரமங்களை எதிர்கொள்ள நாங்கள் படித்துவிட்டோம்.’ – என்று டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயிலும் மாணவரான முஹ்தஸிம் அலி கூறுகிறார்.
இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து டெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தை நீண்டகாலம் சுற்றி வளைத்த குழுவில் அங்கமான டாக்டர்.ஃபுரூஸ் ராஜி ஃபர்த் இதே கருத்தை கூறுகிறார்.
இதனிடையே, ஐ.நா தலைமையிலான தடையை தவிர அமெரிக்கா தனியாகவும் ஈரான் மீது தடையை விதிக்க பல்வேறு நாடுகளை நிர்பந்தித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெயை இறக்குமதிச் செய்வதை நிறுத்தாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதத்தை ஈரானில் இருந்து பெறுகிறது. ஆகையால் ஈரானின் எண்ணெயை இந்தியா வேண்டாம் என்று கூறாது என்பது ஈரான் தலைவர்களின் நம்பிக்கையாகும்.
அண்மையில் டெல்லி இஸ்ரெல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதித்துள்ளது. ஆனால், விசாரணைக்கு அனைத்து வகையான ஒத்துழைப்பையும் அளித்துள்ள ஈரான், இரு நாடுகள் இடையேயான உறவை சீரமைப்பதில் தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேக்னடிக் குண்டு வைத்ததின் பின்னணியில் ஈரான் செயல்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறும் இஸ்ரேல் பின்னர் ஏன் அதனை வெளியிடவில்லை என்று கேட்கிறார் டெஹ்ரானில் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ் இயக்குநர் மெஹ்தாப் ஆலம் ரிஸ்வி.
சி.ஐ.ஏ, மொஸாத் ஆகிய உளவு அமைப்புகளுக்குத்தாம் இத்தகைய மேக்னடிக் குண்டுகளில் அனுபவம் உள்ளது. ஆனால், ஈரானியர்கள் எவருக்கும் எதிராக இதனை உபயோகித்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று மெஹ்தாப் ஆலம் கூறுகிறார். முக்கியமான கட்டத்தில் அனைத்து நாடுகளின் ஆதரவும் தேவைப்பட்ட சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை மையமாக கொண்டு ஒரு தாக்குதலை நடத்த ஈரான் எவ்வாறு துணியும்? என்று முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷைகுல் இஸ்லாம் கேள்வி எழுப்புகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 1100 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்கிறது. எண்ணெய் விலையின் பாதியை இந்தியாவில் உள்ள தயாரிப்புகளை இறக்குமதிச் செய்வதற்கு ஈரான் பயன்படுத்துகிறது.
அணுசக்தி திட்டத்தை விட ஃபலஸ்தீன் விவகாரத்தில் ஈரான் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடுதான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு களமிறங்க தூண்டியது என்று பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் அணுசக்தி மத்தியஸ்தருமான லாரிஜானி கூறியுள்ளார். அணுசக்தி ஒரு திரை மட்டுமே. அதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக