புதன், மார்ச் 21, 2012

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் மதிமுகவுக்கு கெளரவமான தோல்வி

Vaiko and Sathan Thirumalaikuma
 சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கெளரவமான தோல்வியைத் தழுவியுள்ளது மதிமுக.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த வைகோ, கடந்த பொதுத் தேர்தலின்போது தேமுதிகவின் வரவால், ஜெயலலிதாவால் உதாசீனப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். சீட் கொடுப்பதற்கு அவரை பெருமளவில் இழுத்தடித்த அதிமுக, கடைசியில் அவரை பெரிய அளவுக்கு டென்ஷன்படுத்தியதால், கோபமடைந்த வைகோ கூட்டணியை விட்டு விலகினார். தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இந்த முடிவு காரணமாக 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. இந்த நிலையில் இந்த முறை சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக முதல் ஆளாக அறிவித்தவர் வைகோதான். அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டி சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்டதுதான்.

சங்கரன்கோவில் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றவரான மறைந்த கருப்பசாமி, வைகோ மீது நிறைய மரியாதை வைத்தவர். தேர்தல் பிரசாரத்தின்போது தவறாமல் வைகோவைப் பார்த்து ஆசி பெறத் தவறாதவர்.

கருப்பசாமி மறைந்தபோது வைகோ பெரும் துயரத்தில் மூழ்கினார். கட்சி பாரபட்சம் பார்க்காமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருப்பசாமியை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் - கருப்பசாமியின் தலைவரான ஜெயலலிதாவை விட, வைகோதான் கருப்பசாமியை மனதார புகழ்ந்து பேசினார் என்பது நினைவிருக்கலாம்.

அப்படிப்பட்ட கருப்பசாமி நான்கு முறை உறுப்பினராக இருந்த சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்பதை அறிவித்த வைகோ தொடர்ந்து அங்கு பிரசாரத்தையும் முதல் ஆளாக தொடங்கினார். பட்டி தொட்டியெங்கும் ஓயாமல் பிரசாரம் செய்தார். இத்தொகுதியில் அதிக நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்தவர் வைகோ மட்டுமே.

மேலும், மதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சதன் திருமலைக்குமாருக்கும் தொகுதியில் நல்ல பெயர்தான். எனவே இந்த முறை மதிமுக இங்கு வெற்றி பெறும் என்ற நிலைதான் காணப்பட்டது. யாரைப் பார்த்தாலும் சதனுக்கு வாய்ப்பிருக்கிறது என்றுதான் பேசி வந்ததைப் பார்க்கவும் முடிந்தது.

திமுகவே, மதிமுகவைப் பார்த்துப் பயப்படும் அளவுக்குத்தான் நிலை இருந்தது. இதனால் அதிமுகவுக்கே கூட உள்ளூர பயம்தான். இருந்தாலும், தற்போது 3வது இடத்தையே மதிமுகவால் பிடிக்க முடிந்துள்ளது.

இருப்பினும் மதிமுக பெற்றுள்ள வாக்குகளைப் பார்க்கும்போது நிச்சயம் அக்கட்சியினருக்கு சற்று பெருமையாகத்தான் இருக்கும். காரணம், முக்கியக் கட்சியான திமுகவை விட 6000 வாக்குகள்தான் குறைவாகப் பெற்றுள்ளார் திருமலைக்குமார். திமுகவுக்கு இத்தேர்தலில் 26,220 வாக்குகள் கிடைத்துள்ளன. திருமலைக்குமார் பெற்ற ஓட்டுக்கள் 20 ஆயிரத்து 678 வாக்குகள். இது ஒன்றும் மோசமில்லை. திமுகவே சொற்ப வாக்குகளைப் பெற்றிருக்கும்போது அதற்கு பக்கத்தில் மதிமுக வந்திருப்பதே பெரிய வெற்றிதான்.

அதை விட முக்கியமாக மதிமுகவுக்கு கடும் போட்டியாக விளங்கி வரும் தேமுதிகவை தனக்குப் பின்னால் தள்ளி விட்டதோடு, மிக சொற்ப வாக்குகளைப் பெற வைத்ததும் கூட மதிமுகவுக்கு நல்ல விஷயம்தான்.

மொத்தத்தில், மதிமுக இந்தத் தேர்தலில் பெற்றிருப்பது கெளரவமான தோல்விதான். இந்த தோல்வியால் மதிமுகவுக்கு லாபமும் இல்லை, அதே சமயம் நஷ்டமும் இல்லை. ஆனால் தனது செல்வாக்கை அக்கட்சி நிரூபித்துள்ளது. தான் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை அக்கட்சி நிரூபித்துள்ளதாக கூடக் கருதலாம்.

தேர்தல் பிரசாரத்தின்போது சங்கரன்கோவில் தேர்தல் முடிவு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பேசினார் வைகோ. அரசியலில் திருப்பம் ஏற்படுகிறதோ இல்லையோ நிச்சயம் மதிமுகவை நோக்கி அதிமுகவை திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக