புதன், மார்ச் 28, 2012

ஷேக் கர்ளாவிக்கு விசா மறுப்பு: பிரான்சிற்கு கடும் எதிர்ப்பு !

தோஹா:உலக புகழ்ப்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவிக்கு விசா மறுத்த பிரான்சின் நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிர கருத்துக்களுக்கு எதிரான கொள்கையை உடைய கர்ளாவியை பிரான்சில் நுழைய அனுமதிக்காதது வருத்தத்திற்குரியது என்று இண்டர்நேசனல் யூனியன் ஆஃப் முஸ்லிம் ஸ்காலர்ஸ் பொதுச்செயலாளர் ஷேக் அலி அல் கரதாகி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரான்சில் யூனியன் ஆஃப் இஸ்லாமிக் ஆர்கனைசேசன்ஸ் அடுத்த மாதம் நடத்த இருந்த நிகழ்ச்சியில் 86 வயதான கர்ளாவி பங்கேற்கவிருந்தார்.
பிரான்சின் இறையாண்மையை மதிக்கிறோம். அவர்களின் தீர்மானத்தை தத்துவரீதியாக அங்கீகரிக்கிறோம். ஆனால், நாகரீகம் மற்றும் ஜனநாயகத்தின் நாடான பிரான்சு இத்தகையதொரு முடிவை மேற்கொண்டது எங்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது என்று கரதாகி கூறினார். பிரான்சு தனது முடிவை மறுபரிசீலனைச் செய்யும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் பிரான்சின் துலூஸில் யூத பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் படுகொலையை கண்டித்த கரதாகி, போர்க்காலத்தில் கூட பெண்களையும், குழந்தைகளையும் தாக்குவது கூடாது என்ற கொள்கைதான் இஸ்லாத்திற்குரியது என்று தெரிவித்தார்.
கர்ளாவியை பிரான்ஸ் வரவேற்காது என்று கத்தர் அமீருக்கு அறிவித்துள்ளதாக பிரான்சின் அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஏற்கனவே தெரிவித்துள்ளார். பிரான்சின் கொள்கைகளுக்கும், கர்ளாவியின் கருத்துக்களுக்கும் பொருத்தமில்லை என்பது சர்கோஸியின் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக