சனி, மார்ச் 24, 2012

எனது மகன் அப்பாவி! தயவுசெய்து அவனது வாழ்வை பாழாக்கிவிடாதீர்கள் !

மதுபானி:தூசிகள் நிறைந்த அந்த கிராமம் மயான அமைதியாக காட்சியளித்தது. களிமண்ணால் கட்டப்பட்ட வீடு, உடைந்து போன மரக்கதவுகள், இவற்றையெல்லாம் பார்க்கும்போதே அக்குடும்பத்தின் பொருளாதார நிலையை தெளிவாக எடுத்துக்காட்டியது. விரக்தியோடும், மிகுந்த ஏமாற்றத்தோடும் அக்குடும்பத்தின் தலைவர் உடைந்து போன கதவுகளுக்கு முன்னால் நின்று பரிதாபமாக காட்சியளித்தார். யார் அவர்? எதற்காக அவர் இவ்வாறு காட்சியளிக்கிறார்? விசாரித்தபோது கண்களில் இருந்து நீர் வழிந்தது.பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இருக்கின்ற கிராமம் டர்பர் டோலா. இந்த கிராமத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கின்ற முஸ்லிம்களே அதிகம். அக்கிராமத்தில் ஹோமியோபதி மருத்துவராகவும், மதரஸாவில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருபவர் தான் டாக்டர்.நஸருல்லாஹ் ஜமால். அவருடைய இந்த விரக்திக்கு காரணம்
21 வயதே ஆன‌ அவருடைய இளைய மகன் கயூர் அஹமது ஜமாலி டெல்லி சிறப்பு காவல்துறையினரால கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட நிலையை அவர் கூறுவதாவது,
‘என்னுடைய இளைய மகன் கயூர் அஹமது ஜமாலி தர்பங்கா மாவட்டத்திலுள்ள‌ மதரஸா அஹமதியா ஸலஃபியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி முதல் தர்பங்கா மற்றும் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு டெல்லி சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். என்னுடைய மகன் ஜமாலியை தான் முதன் முதலில்  நவம்பர் 2011-ல் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு, ஜமா மஸ்ஜித் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் பெங்களூர் சின்னசுவாமி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு ஆகியவற்றில் எனது மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்தனர்.
24 நவம்பர் 2011 அன்று சாதாரண உடையில் வந்த போலிஸார் எனது வீட்டின் கதவை தட்டினர். கதவை திறந்து விசாரித்தபோது எனது மகனின் நண்பன் ஒருவன் கேமராவை திருட முயற்ச்சித்த போது ஒரு பையை விட்டுவிட்டதாகவும் அந்த பையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. நான் எதற்காக இந்த பையை பெற்றுக்கொள்ள வேண்டும்? என்னுடைய மகனின் நண்பன் என்று நீங்கள் கூறும் யாரையும் எனக்கு தெரியாது, யார் கேமராவை திருடினார்கள் என்பது எனக்கு தெரியாது என்று கூறினேன். பையை வாங்க மறுத்தவுடன் எனது மகனைப்பற்றி விசாரித்தார்கள். எனது மகனை எங்கே என்று கேட்டார்கள். அச்சமயம் எனது மகன் வீட்டில் தான் இருந்தான். எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும், விசாரணை முடிந்தவுடன் திருப்பி அனுப்பி விடுவதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் அவனை தீவிரவாத தாக்குதலோடு தொடர்பு படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் எங்கள் கிராமத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக இதுவரை 12 இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள்னர்.’ இவ்வாறு அவர் கூறினார்.
‘எந்த விசாரணைக்காக அழைத்துச் செல்கிறார்கள் என்பதை கூட எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அடுத்த நாள் தீவிரவாதி கைது என்று செய்தி படித்தவுடன் தான் எங்களுக்கே தெரியவந்தது என்று கூறினார். என் மகன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. ஒரே ஒரு முறை தவிர்த்து எனது மகன் பீஹார் மாநிலத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு சென்றதே இல்லை’ என பரிதாபமாக கூறினார்.
உங்களுடைய மகன் என்றைக்காவது தவறான வழியில் சென்றிருக்கிறாரா என்று கேட்டபோது அதனை முற்றிலுமாக மறுத்தார். ‘எனது மகன் ஒருபோது தவறான பாதையில் சென்றதில்லை அப்படி அவன் சென்றிருப்பானேயானால் அவனை மதரஸாவிலிருந்து என்றைக்கோ நீக்கி இருப்பேன். அவனுக்கு எதிராக இதுவரை எந்த குற்றச்சாட்டுக்களும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை எனது மகன் எந்த குற்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை’ என திட்டவட்டமாக கூறினார்.

அவரது பக்கத்து வீட்டுக்காரர்களும் இதையே கூறுகிறார்கள். கையூர் அஹமது ஜமாலி சாதுவான மாணவன் என்றும் அவனை தீவிரவாதி என்று கூறுவதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கூறுகிறார்கள்.
‘என்னுடைய மகன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு உரிய தண்டனையை வழங்குங்கள் இல்லையென்றால் அவனை விடுவித்துவிடுங்கள், அவனுடைய வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்’ என அரசுக்கு நஸ்ருல்லாஹ் ஜமால் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக