வெள்ளி, மார்ச் 30, 2012

திருச்சி கே.என்.நேரு தம்பி ராமஜெயத்தின் கொலை நடந்தது ஏன்? திடுக்கிடும் தகவல் !

திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும்
குவிக்கப்பட்டுள்ளனர்.
செல்வாக்கு உள்ளவர்: திருச்சி தில்லை நகரில் வசித்து வருபவர் ராமஜெயம் ( 50 ) .இவர் எம்.பி.ஏ., பட்டதாரி. நேருவின் இளைய சகோதரர் ஆவார். நேரு அமைச்சராக இருந்த நேரத்தில் ராமஜெயம் தான் முழு பொறுப்பாக அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார். நேருவின் பல சொத்துக்களையும் இவரே நிர்வகித்து வந்தார் . பொதுமக்கள் பிரச்னைகளை கவனிப்பது மற்றும் கட்டப்பஞ்சாயத்துகள் செய்வது இவரது வேலையாக இருந்து வந்தது. ஆட்சி மாறியதும் இவர் கல்லூரி மற்றும் தொழில் பணிகளில் மட்டுமே அக்கறை காட்டினார்.

இந்நிலையில் காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லணை அருகே திருவளர்சோலை அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. இவரது உடலை கைப்பற்றிய போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு தி.மு.க.,வினர் குவிந்திருப்பதால் பதட்டம் நிலவி வருகிறது.

கொலைக்கான காரணம் என்ன? திருச்சி - திண்டுக்கல் சாலையில் இன்ஜினியர் கல்லூரி நடத்தி வந்தார். இதில் ஒரு ஏரியை புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது. இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் கையகப்படுத்தியது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஜனனி குரூப்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் மார்பிள், குவாரி தொழில், மற்றும் பல்வேறு காம்ப்ளக்ஸ், கான்ட்ராக்ட் தொழில் நடத்துவது உள்ளிட்ட தொழில்களில் இவருக்கு பல கோடி வருமானம் வந்து கொண்டிருந்தது. தரணி மினரல்ஸ் என்ற குடி நீர் நிறுவனம் , ரியல் எஸ்டேட், கல்லூரி, அரிசி ஆலை என பல்வேறு நடத்தி வந்தார். இந்த தொழில் போட்டி காரணமாவும் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளும் இருந்து வந்தது.

இவருக்கு ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் என்பவருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்தது. கடந்த ( 2007 ம் ஆண்டில் ) 4 ஆண்டுகளுக்கு முன்னர் வையம்பட்டி அருகே துரைராஜூம் அவரது சகோதரர் சக்திவேலும், காரில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ராமஜெயம் மீதும் சந்தேக பார்வை இருந்து வந்தது. சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருந்தார். இதன் ஒருபக்க விசாரணையும் நடந்தது. தி.மு.க., கட்சிக்குள்ளும் வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வாங்கி கொடுப்பது தொடர்பாக உள்பகை இருந்து வந்தது. கடந்த கால கட்டப்பஞ்சாயத்து காரணமாகவும் எதிரிகள் இருக்கின்றனரா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் குற்றவாளிகள் யாராக இருக்கும் என போலீசாரால் யூகிக்க முடியவில்லை.

கடத்தியது எப்படி பரபரப்பு தகவல்: இன்று காலையில் வாக்கிங் சென்ற போது இவர் டெம்போ வேன் மூலம் கடத்தப்பட்டுள்ளார். உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்த ராமஜெயத்தை கொலை செய்ய ஒரு கும்பல் வேன் மூலம் வந்தது. அவரிடம் ஏதோ பேச வேண்டும் என கூப்பிட்டனர். ஆனால் சுதாரித்து கொண்ட ராமஜெயம் மறுத்தார். அவர் மறுக்கவே வலுக்கட்டாயமாக வேனில் தூக்கி போட்டனர். பின்னர் வேன் வேகமாக புறப்பட்டது. வேனில் இருந்த படியே அவரை கொலை செய்திருக்கலாம். என தெரிகிறது பின்னர் அவரைது உடலை ஒரு காட்டு புதருக்குள் வீசியிருக்கலாம் என தெரிகிறது. அவரது கைகள் இரும்பு கம்பி மற்றும் கயிறுகள் மூலம் கட்டப்பட்டிருந்தன. சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட அந்த வேனை அக்கம் பக்கத்தவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக